வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை: மதுரையில் பரபரப்பு

tamil.thehindu.com- என்.சன்னாசி : மதுரையில் வாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விகே.குருசாமி. திமுக பொதுக்குழு உறுப்பினரான இவர், மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டலத் தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மண்டலத் தலைவர் ராஜ்பாண்டிக்கும் ஏற்கெனவே தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக முன் விரோதம் உள்ளது. இருதரப்பிலும் பழிக்குப்பழியாக இதுவரை 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குருசாமியின் மருமகன் எம்எஸ்.பாண்டி (46). காமராஜபுரம் பகுதி திமுக செயலாளராக இருந்தார். வழக்கறிஞரான இவர் மீது ராஜ்பாண்டி கொலை வழக்கு உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜ்பாண்டி தரப்பால் பாண்டிக்கு ஏற்கெனவே ஆபத்து இருந்தது.
இந்நிலையில், இன்று காலை பாண்டி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். சிந்தாமணி நல்லமுத்து ரோடு சந்திப்பு அருகில் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' கொடுக்கும் இடம் அருகே தனது கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தார்.

அப்போது, திடீரென அவர் அருகில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 6 பேர் கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாண்டியை சரமாரியாக வெட்டியது. அவர் தப்பித்து ஓட முயன்றார், ஆனாலும், அக்கும்பல் விடவில்லை. கீழே விழுந்த அவர் மீது நெற்றி, நெஞ்சு உட்பட சுமார் 11 இடங்களில் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியது.

தேர்தல் பணியிலிருந்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு திரண்டனர். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியில் அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கீரைத்துறை போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ராஜ்பாண்டி தரப்பினர் இக்கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே நடந்த ராஜ்பாண்டி மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்திருப்பது தெரிந்தது.
வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் நடந்த இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கொலையாளிகளை தனிப்படையினர் தேடுகின்றனர். கொலையுண்ட பாண்டியின் மனைவி திமுக கவுன்சிலராக இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக