வியாழன், 4 ஏப்ரல், 2019

தமிழகத்தின் குரலாக ஒலிக்கிறாரா ராகுல் காந்தி?

ஆர்.முத்துக்குமார் தமிழகத்தின் குரலாக ஒலிக்கிறாரா ராகுல் காந்தி?மின்னம்பலம்: வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தைக் கடந்த காலங்களில் திமுக எழுப்பியதற்கு முக்கியமான காரணமே காங்கிரஸ் கட்சிதான். அரசின் நலத் திட்டங்கள் முதல் அனைத்து அம்சங்களிலும் வடஇந்தியாவுக்கு, குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் ஆட்சியும் தென்னிந்தியாவைக் கண்டுகொள்வதில்லை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது என்ற விமர்சனத்தைத் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைப்பதுண்டு.

ஆனால், தற்போது வெளியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திமுக வெகுவாக வரவேற்றுள்ளது. அதை வெறுமனே கூட்டணிக் கட்சியின் தேர்தல் அறிக்கையை வரவேற்க வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காகச் செய்யாமல், கொள்கை சார்ந்த, கோரிக்கை சார்ந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டி வரவேற்றிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மற்ற அரசியல் கட்சிகளும்கூடப் பாராட்டியிருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தின் உரிமைசார் போராட்டக்களங்களில் இருப்போரிடமிருந்தும் வாழ்த்துத் துளிகள் வந்துசேர்ந்துள்ளன. காரணம், சொன்னதைச் செய்வோம் என்ற முழக்கத்துடன் வந்திருக்கும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழகம் சார் அம்சங்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு
முதலில் நீட் தேர்வு குறித்த வாக்குறுதியை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம், தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழர்களின் தொடர் முழக்கம். அது மிகப்பெரிய போராட்டமாக வெடித்ததும், மாணவி அனிதா உயிர் நீத்ததும் தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுக்க அனலைக் கிளப்பின. தமிழக மாணவர்களின் எதிர்காலத்துக்கு இடையூறாக இருக்கும் நீட் தேர்வை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு நீட் தேர்வு விஷயத்தில் எந்தவொரு சமரசத்துக்கும் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டது.
ஆக, நீட் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது காங்கிரஸ் கட்சி என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு பற்றிப் பேசியிருக்கிறது காங்கிரஸ். சில மாநிலங்களில் நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்துகிற உரிமையைப் பறிப்பதாக இருப்பதால், நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் அது ரத்து செய்யப்பட்டு, நீட் தேர்வுக்கு இணையான மாநில அளவிலான வேறு தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நீட் தேர்வு குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காரணம், நீட் தேர்வு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே அதைக் கொள்கை ரீதியாக எதிர்க்கத் தொடங்கிய தமிழகம், பின்னர் அதன் செயல்பாட்டு விதத்தையும் சுட்டிக்காட்டிக் கடுமையாக எதிர்த்தது. நீட் எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்றது தமிழகத்தில்தான். நீட் தேர்வைக் கைவிடும் வாய்ப்பே இல்லை என்று பாஜக திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட நிலையில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கும் வாக்குறுதி தமிழக அரசியல் கட்சிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலப் பட்டியலில் கல்வி
அடுத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை குறித்தும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பேசியிருக்கிறது. உண்மையில், இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய காலத்தில்தான் அதுவரை மாநிலப் பட்டியலிலிருந்துவந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ் கட்சி. மாநில உரிமைகளின் மீது காங்கிரஸ் கட்சி நடத்திய பெரும் தாக்குதல் என்று அந்த முடிவு விமர்சிக்கப்பட்டது.
அன்று தொடங்கி இன்று வரை கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையைத் தமிழகம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இந்த அம்சத்தைக் கோரிக்கையாகவும் வாக்குறுதியாகவும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையை எப்போதெல்லாம் மத்திய அரசு முன்னெடுக்கிறதோ அப்போதெல்லாம் அதில் இருக்கக்கூடிய சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது தமிழகம்.
இந்திரா காந்தி எடுத்த அந்த முடிவை அவருடைய பேரன் ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்வாரா என்ற கேள்வி எழுந்த பின்னணியில்தான் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. அதில் கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்துப் பேசியிருக்கிறது. அடிப்படையில் கல்வி, பள்ளிக் கல்வி, உயர் கல்வி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டில், பள்ளிக் கல்வியை மட்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, உயர் கல்வியைப் பொதுப் பட்டியலிலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது.
அந்த வகையில், தமிழகத்தின் நாற்பதாண்டுக் காலக் கோரிக்கைக்குப் பகுதி அளவிலான தீர்வைக் கொடுக்க காங்கிரஸ் கட்சி முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. இது அடுத்த கட்டத்துக்கு நகர விரிவான விவாதங்கள் தேவைப்படும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், எந்தவொரு தேசியக் கட்சியும் அவ்வளவு சுலபத்தில் தன் உரிமைகளை விட்டுக்கொடுத்து விடாது அல்லவா!

மீனவர் நலம்
அடுத்தது, மீனவர்களுக்கெனத் தனி அமைச்சகம் உருவாக்கும் வாக்குறுதி. சற்றேறக்குறைய நாற்பதாண்டுக் காலமாகத் தமிழக மீனவர்கள் அண்டை நாட்டு அரசுகளால் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் உடல்ரீதியாகத் தாக்குதலுக்கு ஆளாவதும், மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளைப் பறிகொடுப்பதும் தொடர்ச்சியாக நடப்பதன் காரணமாகத் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதும் தொடர்கதை. கச்சத்தீவில் நடக்கும் தாக்குதல்கள் அதற்குச் சரியான சாட்சியம்.
அந்த அவலமான தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஏதுவாக மீனவர்களுக்கெனத் தனி அமைச்சகம் வேண்டும் என்ற கோரிக்கையைப் பல ஆண்டுகளாகத் தமிழகம் முன்வைத்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோரிக்கையை ஏற்பதாகச் சொன்னது பாஜக. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களின் பார்வையில் மிக முக்கியமான வாக்குறுதி. உண்மையில், இப்படியோர் அமைச்சகம் உருவாகும்பட்சத்தில் தமிழகம் மட்டுமல்ல, குஜராத், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் கடலோர மாநிலங்கள் அனைத்துமே பலன் பெறும்.

விவசாயிகள் கடன்
மீனவர் போராட்டங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம் நடந்த போராட்டங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றுவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்களே. காவிரி நீர் கிடைக்காமை, மழை பொய்த்தது, விளைச்சலின்மை என்பன போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டனர். வங்கிக் கடன்கள் அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிய நிலையில், தமிழகத்தில் நடத்திய போராட்டங்களைத் தாண்டி இந்தியத் தலைநகர் டெல்லிக்கே சென்று பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டங்கள் இந்திய அளவிலான பேசுபொருளாக மாறின. விவசாயிகளுக்கு ஆதரவான குரல் இந்திய அளவில் எழுவதற்குத் தமிழக விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்கள் காரணமாக அமைந்தன.
தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றிப் பேசியிருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநில விவசாயிகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நிலையில், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதோடு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தையும் காங்கிரஸ் கட்சி தந்துள்ளது. இந்த வாக்குறுதிக்குப் பின்னால் தமிழகம் நடத்திய போராட்டங்களின் பங்களிப்பு முக்கியமானது.
கீழடி அகழ்வாராய்ச்சி மீது பலத்த சர்ச்சைகள் எழுந்து, அந்த ஆய்வு முடக்கப்படுகிறது, தடுக்கப்படுகிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த நிலையில், நம்முடைய கலை, பண்பாடு, தொன்மை குறித்த ஆய்வுகள் சுதந்திரமான முறையில் நடப்பதற்கு ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் பார்வையிலிருந்து இது முக்கியமான அம்சம்.
அறிக்கையின் புதிய அர்த்தங்கள்
இப்படி தமிழகம் சார்ந்து, தமிழகம் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்த அம்சங்களை ஒட்டி பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. இங்கே இரண்டு அம்சங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தது. மற்றொன்று, இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியைத் தமிழகத்தின் சார்பில் முன்மொழிவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது. இந்த இரண்டு அம்சங்களையும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் புதிய அர்த்தங்கள் காணக் கிடைக்கின்றன.
தேர்தல் அறிக்கை வழியாக இந்தியாவை இரண்டாகப் பிரிக்கிறார் ராகுல் காந்தி என்கிற பாஜகவின் விமர்சனத்தையும் சேர்த்துப் பார்த்தால், தெற்கின் கொள்கைகள் ராகுல் காந்தியை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றனவோ என்கிற வினா எழுகிறது.
விடை கிடைக்கத் தேர்தல் முடிவுக்குக் காத்திருப்போம்!
(கட்டுரையாளர் ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். “தமிழக அரசியல் வரலாறு”, “திராவிட இயக்க வரலாறு”, “இந்தியத் தேர்தல் வரலாறு”, “இந்துத்துவ இயக்க வரலாறு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக