செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மத நம்பிக்கைகள் அமைதியை குலைக்கும் ஆபத்து .. குண்டுதாரியின் பேச்சு வீடியோ


இன்று மதங்கள் என்று நாம் கருதும் அமைப்புக்கள் பலவும் கடந்த காலைங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் செய்திகள் அடிப்படையில் உள்ள நூல்கள்தான்.
மதங்கள் ஒருபோதும் உண்மையை அறிய முடியாது.
அவை ஏறக்குறைய ஒரு அரசியல் சமுக அமைப்புத்தான்.
கடவுள் என்ற கேள்வியோ பிறப்பு இறப்பு போன்ற எல்லையற்ற கேள்விகள் பதில்கள் போன்ற விடயங்களோ மதங்களினால் ஒரு போதும் சரியாக அணுகவே முடியாது. அவற்றின் நோக்கமும் அதுவல்ல. அதுதான் அவற்றின் நோக்கம் என்று மக்களை நம்பவைத்து தங்கள் இருப்பை தக்கவைப்பது மட்டுமே மதங்களின் நடைமுறையாக இருக்கிறது.
அது முற்று முழுதாக தவறு என்று கூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட அளவிலான நோக்கங்களுக்கு அது உதவி புரியக்கூடும்.
அந்த அடிப்படையில் உலகம் மதங்களினால் பல நன்மைகளையும் எக்கச்சகமான தீமைகளையும் சந்தித்து இருக்கிறது.
யுத்த அழிவுகளையும் கல்வி வைத்தியம் போன்ற சேவைகளையும் ஒருங்கு சேர மதங்கள் கொடுத்து இருக்கின்றன . அவை எல்லாம் நேற்றைய வரலாறுகள்.


இன்றைய வரலாறு பெரிதும் மதங்களை தாண்டி வர்த்தகம் உற்பத்தி போன்ற இதர தளங்களை அண்மித்தே இருக்கிறது.
மக்கள் மதங்களை விட்டு வெளியேறுவது மெதுவாக ஆனால் நிச்சயமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
அப்படி வெளியேறிய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள்தான் செல்வ செழிப்போடு மக்கள் மகிழ்வாக வாழும் நாடுகளாக இருக்கின்றன.
மதங்களில் தோய்ந்து கொண்ருக்கும் நாடுகளில் உள்ள மக்கள் அந்தந்த நாடுகளை விட்டு மத சார்பற்ற நாடுகளை நோக்கி வருவது மிகவும் அதிகமாக இருக்கிறது.
இது யாரும் மறுக்க முடியாத பெரிய உண்மையாகும்.
அப்படி வரும் மக்கள் தங்களோடு தங்களின் தோற்றுப்போன சமுக கலாச்சார மத குப்பைகளையும் காவி கொண்டே வருவது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும்.
தங்க இடம் கொடுத்த மதசார்பு அற்ற நாடுகளின் பிம்பங்களை மாற்றும் முயற்சியாக அந்த நாட்டு மக்கள் கருத தொடங்கி உள்ளார்கள் என்பது ஒரு ரகசியம் அல்ல .

குடியேற்ற வாசிகளுக்கு  எதிராக  சொந்த நாட்டு மக்களின் வெறுப்பு அதிகமாகி வருவது  எவ்வளவு ஆபத்தானது என்பதை எல்லோரும் உணரவேண்டும் .
இன்று எல்லா நாடுகளிலும் பல்வேறு இன மத கலாசார மக்கள் கூடி வாழ்கிறார்கள்.
எந்த சமுகத்தையும் இன்னொரு சமுகம் கலாச்சாரம் இனம் மதம் என்ற ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்த கூடாது .
அது எந்த நன்மையையும் எவருக்கும் அளிக்காது.
இந்த அழகிய உலகம் இருப்பது மனிதர்களும் இதர ஜீவராசிகளும் இனிதே வாழ்வதற்குத்தான்.
இந்த அழகிய உலகம் அல்லாவுக்கோ ஜீசசுக்கோ முருகனுக்கோ புத்தருக்கோ மகாவீரருக்கோ மேலும் ஏதாவது ஒன்றிற்கோ மட்டும் சொந்தமானது அல்ல.
இந்த உலகுக்கு எவரும் உரிமை கோர முடியாது.
இது எல்லோருக்குமானது ..
உங்களின்  நம்பிக்கைகள் பிறரின் மன அமைதியை குலைக்கும் அளவுக்கு இருப்பது சரி  அல்ல.
அது ஆபத்தானதும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக