ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

பாஜக ஆட்சியை தக்க வைக்க ...உச்சநீதிமன்ற நீதிபதியை அகற்ற ...சதி ?

vikatan.com - sathya-gopalan" : உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார், இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம், தான் தலைமை நீதிபதியின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்யும்போது, நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்தப் பெண், உச்ச நீதிமன்ற 22 நீதிபதிகளுக்கு வாக்குமூலம் ஒன்றைப் புகாராக அனுப்பியிருந்தார்.இந்தப்  புகார் தொடர்பான வழக்கை விசாரிக்க,  உச்ச நீதிமன்ற விடுமுறை கால அவசர அமர்வு இன்று காலை கூடியது. 
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10: 30 மணிக்கு கூடியது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ``நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சமமான முறையிலும், ஒழுக்கமான முறையிலுமே நடத்தப்படுகிறார்கள்.

என்மீது குற்றம் சுமத்திய அந்தப் பெண், என் வீட்டில் உள்ள அலுவலகத்தில் ஒன்றரை மாதம் மட்டுமே பணிபுரிந்துள்ளார். அவர், அங்கு பணிபுரிந்தபோதே என் மீது இதே போன்று ஒரு முறை குற்றம் சாட்டினார். பொய்யான புகார்களுக்கு நான் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற காரணத்தினால், அப்போது இதுபற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அந்தப் பெண்மீது முன்னதாகவே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு எஃப்ஐஆர்-களும் அவர்மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்தப் பெண்ணுக்கு எப்படி உச்ச நீதிமன்றத்தில் வேலை கிடைத்தது என்பது தொடர்பான ஒரு கிரிமினல் வழக்கும் நிலுவையில் உள்ளது. நான், இது தொடர்பாக டெல்லி காவல் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் கணவர் மீதும் 2 புகார்கள் நிலுவையில் உள்ளன.
நான் 20 ஆண்டுகளாக தன்னலமில்லாமல் பணியாற்றிவருகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை நம்பமுடியவில்லை. இதுவரை ரூ.6,80,000 மட்டுமே என் வங்கிக் கணக்கில் உள்ளது. இதுதான், என் மொத்த சொத்து. 20 ஆண்டுக்கால சேவைக்கு, ஒரு தலைமை நீதிபதிக்குக் கிடைத்த வெகுமதி. பெரும் நம்பிக்கையுடன் நீதிபதியாக நான் பணியாற்றத் தொடங்கினேன். ஓய்வுபெறும் நிலையில், என்னிடம் ரூ.6 லட்சம் இருக்கிறது. என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அந்த இளநிலை உதவியாளர் மட்டுமே உள்ளார் எனத் தோன்றவில்லை. அந்தப் பெண்ணுக்குப்  பின்னால் மிகப்பெரும் சக்தி உள்ளது. அவர்கள், நீதிமன்றத்தையோ அல்லது தலைமை நீதிபதியையோ செயலிழக்கவைக்கும் நோக்கில் இதைச் செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலின்கீழ் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிபதிகள் பணியாற்றினால், நேர்மையான மனிதர்கள் உயர் பதவிகளுக்கு வர இயலாது. நான், நாட்டு மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் நான் இறுதிவரையில் என் பணியை சிறப்பாகச் செய்வேன்.  என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கை நான் விசாரிக்கப்போவதில்லை. அதை என் அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள்” எனக் கூறினார்.
 அடுத்து பேசிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கு, நீதிமன்றத்தை மிரட்டும் தொனியிலேயே உள்ளது என்றார். அந்த  நேரத்தில் குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பாலியல் துன்புறுத்தல் சட்டம் 16-ன் படி அதனால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியில் அறிவிக்கக் கூடாது. ஆனால், இந்த வழக்கில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ''இந்த அமர்வுக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். இந்த அசாதாரண சூழ்நிலையைத்தான் நீதித்துறை அச்சுறுத்தலில் இருப்பதாகக் கூறுகிறேன்'' என்றார். அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிமன்ற நடவடிக்கையின்மீது நம்பிக்கை இல்லை என்றால், எப்படிச் செயல்படமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, ''அரசை ஆதரித்து வாதிடுவதே என் தொழில். ஆனால் அரசுக்கு ஆதரவாக வாதாடுவதினாலேயே பல முறை நான் தாக்கப்பட்டுள்ளேன்'' என்று தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் வேதனை தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ''நாம் எதிர்க்கொள்வது போன்ற தாக்குதல்களை எதிர்க்கொண்டால், எந்த ஒரு நீதிபதியும் வழக்குகளுக்குத் தீர்வு காண மாட்டார். மரியாதை மட்டுமே நமக்குக் கிடைக்க வேண்டும். அதன்மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும்கூட என்றார்.
இறுதியாகப் பேசிய நிதிபதி அருண் மிஸ்ரா, தலைமை நீதிபதி அமர்வில் இருக்கையில் இதுதொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கப்போவதில்லை. இதை வெளியிடத் தடையும் இல்லை. ஆனால், ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயல்படுங்கள் எனக் கூறி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி மீது குற்றம் சுமத்திய பெண், ''சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக