திங்கள், 8 ஏப்ரல், 2019

மன்சூர் அலிகான் மருத்துவ மனையில் . பிரச்சாரத்தில் மயங்கி விழுந்தார்

பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்மின்னம்பலம் : நாம் தமிழர் கட்சியின் சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களில் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு சிறப்புக் கவனம் பெற்ற வேட்பாளராக இருப்பவர்களில் நடிகர் மன்சூர் அலிகானும் ஒருவராக இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் இவர் மேற்கொண்டிருக்கும் பிரச்சார முறைகளே அதற்கு காரணமாக உள்ளது. சமூக வலைதளவாசிகள் பலரையும் இவரது பிரச்சாரம் கவனிக்க வைத்திருக்கிறது. மக்களைக் கவரும் வகையிலான பல்வேறு யுக்திகளை பிரச்சாரத்தில் இவர் மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாகக் காய்கறி விற்பனை செய்யும் முதியவர்களிடம் சென்று காய்கறிகளை விற்பது; இளநீர் கடையில் இளநீர் விற்பது; பெண் ஒருவருக்கு அம்மிக்கல்லில் சட்டினி அரைத்துக் கொடுப்பது; செருப்பு தைப்பவருக்கு பாலிஷ் போட்டுக்கொடுத்து உதவி செய்வது; துப்புறவுத் தொழில் செய்பவர்களுடன் இணைந்து குப்பைகள் பெருக்குவது; வெங்காயம் விற்பனை செய்வது; ஹோட்டலில் பரோட்டா சுடுவது; தேநீர் போடுவது; விறகு விற்பது; கரும்புச்சாறு பிழிந்து விற்பது என அந்தந்தப் பகுதி சிறு வியாபாரிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவி செய்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
மன்சூர் அலிகானின் இத்தகைய செயல்களால் அவர் வாக்கு கேட்டு செல்லும் பகுதிகளிலெல்லாம் உற்சாகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 7) மாலை திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோதே திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். உடனிருந்த நாம் தமிழர் கட்சியினரும், பொதுமக்களும் அவரை மீட்டு நிலக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக