திங்கள், 29 ஏப்ரல், 2019

நிந்தவூர் தீவிரவாதிகளின் முகாம் ... முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன


(எம்.எப்.எம்.பஸீர்)வீரகேசரி : தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக  கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அது தொடர்பில் மேலும் இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் – வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு கண்டறியப்பட்டன. அத்துடன் அவற்றிலிருந்து ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.
கபூர் மாமா எனப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை எனும் சந்தேக நபருக்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் காத்தான்குடி – மூன்றை சேர்ந்த 34 வயதான அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தவ்ஸ் எனவும் மற்றையவர் காத்தான்குடி தெற்கை சேர்ந்த 30 வயதான ஹம்சா மொஹிடீன் மொஹம்மட் இம்ரான் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரணில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டும் ஒருவரை கழுத்தறுத்தும் கொலை செய்து அவர்களது கடமை நேர ரிவோல்வர் ரக துப்பாக்கிகளை கடத்திச் சென்றமை தொடர்பில் முழுமையான  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


அத்துடன்  கடந்த மார்ச் 9 ஆம் திகதி, அமைச்சர் கபீர் ஹாசிம்மின் இணைப்பாளர்களில் ஒருவர் என கூறப்படும் மொஹம்மட் தஸ்லீம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி அவரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் இந்த சந்தேக நபர்களே என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி வவுணதீவில் பொலிசாரை கொலை செய்துவிட்டு அபகரித்து சென்ற துப்பாக்கிகளில் ஒன்று என மேலதிக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த மூன்று சந்தேக நபர்களிடமும் தொடர்ச்சியாக சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கண்கானிப்பில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷனை அபேசேகரவின் நேரடி கட்டுப்பாக்கில் விசாரணைகள் தொடர்கின்றன.
அதன் போது  அண்மையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலை தாரிகள் உள்ளிட்ட இந்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய மேலும் இரு பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் ஒன்று நிந்தவூரிலும் மற்றையது புத்தளம் – வணாத்துவில்லு பகுதியிலும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வவுணதீவில்  பொலிசாரை கொலை செய்த பின்னர் அபகரிக்கப்பட்ட ரிவோல்வர்களில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆடைகள் உட்பட 4 தோட்டக்கள் என பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பின்னர்  கபூர் மாமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில்,  வணாத்துவில்லுவில் உள்ள பாதுகாப்பு இல்லம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சென்ற அதிரடிப் படையும் சி.ஐ.டி.யும் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அவ் வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பீர்ப்பாய் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். அந்த பிளாஸ்டிக் பீர்ப்பாய்க்குள் இருந்து வவுணதீவு பொலிசார் கொலையின் பின்னர் அபகரிக்கப்பட்ட மற்றைய ரிவோல்வர் உட்பட எராளமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சி.ஐ.டி.யால் மீட்கப்பட்டது.





அதில் ரீ 56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கு பயன்படும் 24 தோட்டாக்கள், இரு மகசின்கள்,  வெளிநாட்டு தயாரிப்பு மைக்ரோ ரக துப்பாக்கி,  உள் நாட்டு தயாரிப்பு 6 ரிவோல்வர்கள், வவுண தீவு பொலிஸாரிடம்  அபகரிக்கப்பட்ட ரிவோல்வர்கள் என ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் நிந்தவூரில் மீட்கப்பட்டுள்ள சில புத்தகங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து முக்கிய தகவல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் சி.ஐ.டி. அவற்றையும் தமது பொறுப்பில் எடுத்து ஆய்வு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
virakesari.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக