செவ்வாய், 9 ஏப்ரல், 2019

சேலம் எட்டுவழி சாலை தீர்ப்பு .. மக்கள் ஆனந்த ஆரவாரம் ..பாட்டு பாடி கும்மி அடித்து

8 way road 8 way road எட்டுவழிச்சாலை தீர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாட்டம்! நக்கீரனுக்கு நன்றி சொன்ன  விவசாயிகள்!!
nakkheeran.in - bagathsingh : எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, சேலத்தில் விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்து பாட்டுப்பாடியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்
சேலம்  சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வர நடுவண் பாஜக மற்றும் அதிமுக அரசுகள் தீவிரம் காட்டின. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி,

நிலத்தை அளந்து எல்லைக்கற்கள் நடப்பட்டன. எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை, சேர்வராயன் மலையைக் குடைந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. மேலும், வனப்பகுதிகளில் இருந்து 100 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலத்தில் 90 சதவீதம், ஏழை சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான ஆண்டுக்கு இருபோகம் விளைச்சல் தரக்கூடிய விளைநிலங்கள் என்பதால் ஐந்து மாவட்ட விவசாயிகளும் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர்.
எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பாமக அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இறுதிதீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திங்களன்று (ஏப்ரல் 8) உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது.



''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக இதுவரை மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உண்மையில் இந்த திட்டத்தால் யாருக்கும் பயனில்லை. இது பசுமைவழிச்சாலையே இல்லை. எப்படியும் எட்டுவழிச்சாலையை அமைத்திட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது தெரிய வருகிறது. சுற்றுச்சூழல்துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. மக்களிடமும் கருத்துகள் கேட்கப்படவில்லை,'' என்றும் தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.
இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் சேலம் உள்ளிட்ட, இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து வேண்டுதல் வைத்திருந்தனர். விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அம்மனுக்கு இன்று பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர். அப்போது வள்ளி என்ற விவசாயிக்கு திடீரென்று அருள் வந்து சாமியாடினார். பூசாரி முருகேசனும் சாமி ஆடினார். மேலும், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடித் தீர்த்தனர். பெண்களும், ஆண்களும் வட்டமாக சேர்ந்து கொண்டு பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும், தீர்ப்புக்கு நன்றி சொல்லியும் கும்மியடித்து பாட்டுப்பாடினர்.
சேலம் ராமலிங்கபுரம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதிகளில் நிலத்தை அளந்து நடத்தப்பட்டு இருந்த எல்லைக்கற்களை விவசாயிகளே பிடுங்கி எறிந்தனர். வீரபாண்டி அருகே கூமாங்காடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
தீர்ப்பு குறித்து குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம், சித்ரா, செல்வி, வீரமணி ஆகியோர் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக எங்களுடைய வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலங்கள் முழுமையும் பறிபோகும் நிலை இருந்தது. ஒருவேளை இந்த திட்டம் அமலுக்கு வந்திருந்தால் நாங்கள் இந்நேரம், தெருவில் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருப்போம். இல்லாவிட்டால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்போம்.



8 way road எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமல், கல்யாணம் காட்சி பண்ண முடியாமல் ரொம்பவே தவித்துப் போயிருப்போம். என்றைக்கு எங்கள் நிலத்தை அளக்க வந்தார்களோ அப்போது இருந்தே நாங்கள் நிம்மதியை தொலைத்து, தூக்கத்தை தொலைத்து, சாப்பாட்டை தொலைத்து தவித்துக் கிடந்தோம். நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு இப்போதுதான் தீர்ப்பின் மூலம் நிம்மதி கிடைத்திருக்கிறது.
இந்த திட்டத்துக்காக போடப்பட்ட அரசாணையை உடனடியாக எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் மேல்முறையீட்டுக்குப் போகக்கூடாது,'' என்றனர்.
கூமாங்காட்டைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பலர் மன உளைச்சலில் இறந்து போயுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். என் வீட்டில்கூட எங்கள் மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாள். அதற்கெல்லாம் இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்த்து இந்த தேர்தலில் வாக்களிப்போம். ஐந்து மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சொந்தபந்தங்களிடம் செல்போன் மூலம் பேசி வருகிறோம். நிச்சயமாக அவர்கள் இந்த தேர்தலில் தோற்றுப்போவது உறுதி,'' என்றார்.
நக்கீரனுக்கு நன்றி சொன்ன விவசாயிகள்:
எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களை காணொலியாகவும், தொடர்ந்து கட்டுரைகளாகவும் நக்கீரன் இதழும், இணையமும் வெளியிட்டு வந்தது. ஆரம்பத்தில் நக்கீரன் வெளியிட்ட ஒரு காணொலி பதிவுக்குப் பிறகே, இப்பிரச்சனையில் மற்ற ஊடகங்களும் தீவிரம் காட்டின. அதை சுட்டிக்காட்டி இன்று பல விவசாயிகள் நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக