சனி, 13 ஏப்ரல், 2019

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக கோரவில்லை’: பியூஷ் கோயல் கருத்துக்கு அதிமுக கூட்டணியினர் பதில் என்ன?- மருத்துவர் சங்கம் கேள்வி

THE HINDU TAMIL : நீட் தேர்வு தொடர்பாக அதிமுக அரசு ரத்து செய்யக் கோரவில்லை. நீட் ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துக்கு அதிமுக கூட்டணியினரின் பதில் என்ன? என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: ''நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், ‘நீட் தேர்வு பிரச்சினை தமிழக தேர்தல் களத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இடம் பெற்றுள்ளது. பல்வேறு மாநில மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாநில உரிமைகளுக்கு எதிரான நீட் ரத்து செய்யப்படும். அதே தரத்திலான தேர்வை மாநிலங்களே நடத்தி, அதன் மூலம் தங்கள் மாநில மாணவர்களை தங்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என வெளியிட்டிருந்தது.
இது வரவேற்பைப் பெற்றது.  இதன் மூலம் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். நீட் ரத்து இப்பிரச்சனையைத் தீர்க்கும்.
இந்நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், ‘நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எழுதும் திறனைப் பெறும் வரை அத்தேர்விலிருந்து விலக்கு கோரப்படும்’  எனக் கூறியிருந்தது.
இதற்கு பதில் கூறும் வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் , தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தொடரும். ரத்து செய்யப்படாது என உறுதிபட நேற்று சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதிமுக நீட் நுழைவுத் தேர்வை தமிழில் நடத்தக் கோரியது. அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வு தொடர வேண்டும் என்பதை அதிமுகவிடம் பேசி சம்மதிக்க வைப்போம் எனக் கூறியுள்ளார். பியூஷ் கோயலின் இந்தக் கருத்து தமிழக மாணவர்களுக்கு எதிரானது.
பியூஷ் கோயலின் இந்தக் கருத்து நீட்டிலிருத்து விலக்கு பெற தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிரானது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நீட் தேர்வு ரத்து செய்யப்படாது எனக் கூறியுள்ளது குறித்து அதிமுகவும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கு எதிராகச் செயல்படும், பாஜக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்''.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக