வியாழன், 11 ஏப்ரல், 2019

அண்ணா பல்கலைக்கழகங்கள் மத்தியரசு கட்டுப்பாட்டுக்கு செல்கிறது? துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு
சூரப்பா - அண்ணா பல்கலைகழக துணைவேந்தர்; சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக
எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்தார்.< சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு துணை வேந்தர் நியமிக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக அப்பதவி காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முக்கியமான பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள் தரப்பில் அதிருப்தியும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் , அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்துள்ளார். நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் அறிவிக்கப்பட்ட பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் சூரப்பா. அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க ஸ்டாலின் , பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மு.க ஸ்டாலின்  - திமுக செயல் தலைவர்

தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் , குறிப்பாக காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில்,கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த திரு எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.தேடுதல் குழுவின்( search committee) கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது. மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணைவேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாம் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ் - பா.ம.க

நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக திணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது. இதற்கு முன் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட சூரிய நாராயண சாஸ்திரியும் தமிழகத்தைச் சாராதவர் தான். அதுமட்டுமின்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.வி.இராமுலு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேணுகோபால் ராவ் ஆகிய இருவருமே ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் நியமனங்கள் அனைத்தும் இயல்பாக நடந்ததாக கருத முடியாது. இதேப் போக்குத் தொடர்ந்தால் தமிழக பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே துணைவேந்தராக நியமிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு விடும். இதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கி.வீரமணி - திராவிடர் கழக தலைவர்

தேடல் குழு ( Search Committee ) என்ற குழுவில் ஏன் பிற மாநிலங்களிலிருந்து நீதிபதிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்களைப் போடவேண்டும்? இதற்குமுன் எப்போதும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனங்களில் நடந்திராத நடைமுறை - இந்த அநீதி - மாநில உரிமைகளைப் பறிப்பதோடு, தமிழ்நாட்டு நீதிபதிகள், கல்விச் சான்றோர் - எவர்மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்லாமற் சொல்லும் இழிவான நிலை அல்லவா?

இதனையும் தடுத்து நிறுத்த ஜனநாயகத்திலும், அரசியலமைப்புச் சட்ட மாநில உரிமைகள் காப்பதிலும் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் தங்கள் எதிர்ப்பையும், வன்மையான கண்டனத்தையும் எழுப்பிட வேண்டும்.
இந்தப் போக்கு இனியும் தொடரக்கூடாது! என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக