செவ்வாய், 9 ஏப்ரல், 2019

திருப்பூர் : பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் .. அதிமுக பாஜக ஒட்டு கேட்டு வரவேண்டாம் ..

திருப்பூர்: வலுக்கும் போஸ்டர் தாக்குதல்!மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுகவும், திமுகவும் தீவிர வார்த்தை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் திருப்பூரில் போஸ்டர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளன.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.எம் ஆனந்தும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயனும் போட்டியிடுகின்றனர். பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் செயல்பாடுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. இவற்றைச் சொல்லி கம்யூனிஸ்ட் கட்சியினரும், தமிழக அரசின் சாதனைகளை சொல்லி அதிமுகவினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இரு தரப்பினரிடையேயும் போஸ்டர் பிரச்சாரம் திருப்பூரில் தீவிரமடைந்துள்ளது. சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் விதமாக, ஐயப்ப பக்தர்கள் வசிக்கும் வீடுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கடந்த வாரத்தில் இந்து அமைப்புகள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டருக்கு எதிர்வினையாக தற்போது திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு மற்றும் பட்டுக்கோட்டையார் நகர் போன்ற பகுதிகளில் திடீரென அதிமுக, பாஜகவினருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், “திருப்பூர் பனியன் தொழிலை நாசமாக்கிய அதிமுக, பாஜக இங்கு ஓட்டு கேட்டு வரவேண்டாம்” என சிறிய பேனரில் எழுதப்பட்டு பல வீடுகள் முன்பு மாட்டி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு போஸ்டரில், “இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்; அதிமுக-பாஜகவினர் இங்கு ஓட்டு கேட்டு வரவேண்டாம்” எனவும் எழுதி ஒட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரங்களில் அதிமுகவினருக்கு தொடர்பிருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனவும்கூறி திமுக கூட்டணி ஆதரவாளர்கள் இந்தப் போஸ்டரை ஒட்டியதாகக் கூறுகின்றனர். இதனால் திருப்பூரில் இருதரப்புக்கும் இடையே போஸ்டர் சண்டை தீவிரமடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக