திங்கள், 29 ஏப்ரல், 2019

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு இல்லை: சத்ய பிரதா சாஹூ

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு இல்லை: சத்ய பிரதா சாஹூமின்னம்பலம் : பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மறு வாக்குப்பதிவு கோரி யாரும் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற கடந்த 18ஆம் தேதி அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் விசிக மற்றும் பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்குப் பட்டியலின மக்கள் வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை பாமகவினர் அடித்து நொறுக்கினர். அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவை நேரில் சந்தித்த திருமாவளவன், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரி மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 29), பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள சத்ய பிரதா சாஹூ,பொன்பரப்பி வாக்குச்சாவடிகளுக்குள் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். எனவே பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவிற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் மதுரை வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக முன்னாள் மாவட்ட ஆணையர் நடராஜன் அறிக்கை சமர்ப்பித்தார் என்று கூறினார். மேலும் சபாநாயகரை அரசு கொறடா மற்றும் அமைச்சர்கள் சந்தித்தது குறித்து எந்தவித புகாரும் வரவில்லை, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் சத்ய பிரதா சாஹூ.
4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், மொத்தமுள்ள 1125 வாக்குச்சாவடிகளில் 205 பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக