ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில் அரசு விருது: கவிஞர் பிறைசூடன் வலியுறுத்தல்

PATதினமணி : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில் தமிழறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் பிறைசூடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் கவிஞர் அறக்கட்டளை சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
"தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோர் தலைமை வகித்தனர்.
அண்மையில் இயற்கை எய்திய பட்டுக்கோட்டையாரின் மனைவி கெüரவாம்பாளின் திருவுருவப் படம், விழா மேடையில் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திரைப்பட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான வைஜயந்திமாலா பாலி, கவிஞர் பிறைசூடன், நடிகை சச்சு, நடிகர் ராஜேஷ், கர்நாடக இசைக் கலைஞர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கு மக்கள் கவிஞர் விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நல்லி குப்புசாமி பேசியதாவது:
மண்ணில் வாழ்ந்தது சில காலமேயானாலும், மக்கள் மனங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் புகழ் பாட ஆண்டுதோறும் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
சமூக அவலங்களையும், பொதுவுடமைத் தத்துவங்களையும் எளிய வார்த்தைகளின் மூலம் சாமானியர்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குச் சொந்தக்காரர் அவர்.
பாரதிக்குப் பிறகு பாரதிதாசன் கோலோச்சினார். அதற்குப் பிறகு அந்த இடத்தை பட்டுக்கோட்டையார் தான் நிரப்பினார் என்றார் அவர்.
இலக்கிய படைப்புகள் பரிமாற்றம்: இதைத் தொடர்ந்து ரஷிய கலாசார மையத்தின் இயக்குநர் கென்னடி ரெகேலோ பேசியது: இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நல்லுறவு உள்ளது. குறிப்பாக இலக்கியத் துறையில் இரு நாட்டு படைப்புகளும் பரஸ்பரம் இந்திய - ரஷிய வாசகர்களிடம் சென்றடைந்துள்ளன.
இந்திய இலக்கிய ஆளுமைகள் ரஷியாவில் பிரபலமானவர்கள். அதைப் போலவே இங்குள்ள வாசகர்களை ரஷிய எழுத்தாளர்கள் வசப்படுத்தியுள்ளனர். மாபெரும் கவிஞரான பட்டுக்கோட்டையாருக்கு ரஷிய கலாசார மையத்தில் விழா எடுப்பது பெருமைக்குரியது என்றார்.
என்றும் வாழ்கிறார்: பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான
வைஜயந்திமாலா பாலி பேசியதாவது: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ஒருபோதும் சாதாரண கவிஞர் என்ற வட்டத்துக்குள் வரையறுத்துவிட முடியாது.
எல்லோருக்கும் கிடைக்காத பல பெருமைகளும், புகழும் அவரைத் தேடி வந்துள்ளன.
அதனால்தான் இன்றைக்கும் அவரைப் போற்றுவதற்காக விழா எடுக்கப்படுகிறது. பட்டுக்கோட்டையார் இறந்து விட்டார் என்று கூறுகிறார்கள். அது உண்மையல்ல.
தனது பாடல்களின் ஊடே அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்றார் அவர்.
நடிகர் ராஜேஷ்: சமூகத்தில் பலருக்கு பேச்சு ஒன்றாகவும் செயல் வேறு விதமாகவும் இருக்கும். ஆனால், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்து காட்டியவர் பட்டுக்கோட்டையார்.
பொதுவுடமை கருத்துகளும், அவருடைய வித்தியாசமான சிந்தனைகளும் சில நேரங்களில் மாற்றுக் கருத்துகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட அவரது படைப்புகள் அனைத்தும் இறவாப் புகழ் கொண்டவை என்றார் அவர்.
தமிழ்ச்சிங்கம்: கவிஞர் பிறைசூடன் பேசியதாவது:
"எத்தனையோ இன்பம் இந்த நாட்டில் உண்டு; அத்தனைக்கும் மேலான இன்பம் இந்தப் பாட்டில் உண்டு' என்று எழுதியவர் பட்டுக்கோட்டையார்.
அவரது பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அதை அனுபவப்பூர்வமாக உணர முடியும். பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் செங்கப்படுத்தான் காடு என்பார்கள். ஆனால், உண்மையில் அது தமிழ்ச் சிங்கம் படுத்த காடு என்றே நான் உரைப்பேன்.
பட்டுக்கோட்டை மறைந்தபோது பாட்டுக்கோட்டையே சரிந்ததாக இரங்கல்பா இயற்றினார் அண்ணா.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கிட வேண்டும். அதற்கு "தினமணி' நாளிதழும், நல்லி குப்புசாமியும் முயற்சியெடுக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில், மக்கள் கவிஞர் அறக்கட்டளை தலைவர் மெய் ரூசவெல்ட், செயலாளர் பழனிவேலு, கவிஞர் முத்துலிங்கம், மூத்த வழக்குரைஞர் காந்தி, மறைந்த பழம்பெரும் பாடகரும், நடிகருமான டி.ஆர். மகாலிங்கத்தின் பேத்தி டி.ஆர். எம்.பிரபா, பேராசிரியர் பெ.கி.பிரபாகரன், செüதாமணி, பட்டுக்கோட்டை டாக்டர் நியூட்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக