சனி, 13 ஏப்ரல், 2019

ராகுல் : ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி.. நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..

மின்னம்பலம் : பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லா திருடர்களின் பெயர்கள் முடிவிலும் மோடி வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடை பெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று தமிழகம் வந்துள்ள மோடி, தேனி, ராமநாதபுரம் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மங்களூருவில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்கிடையே, நேற்று தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோலார் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் 100 சதவிகிதம் திருடர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மோடி ரூ.30 ஆயிரம் கோடியை அவரது நண்பரான அம்பானிக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் (மோடி) 100 சதவிகிதம் மக்களின் பணத்தைத் திருடிவிட்டீர்கள் என்பது உண்மையே என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன் என்று பேசிய ராகுல், ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது. அது நீரவ் மோடியாகட்டும், லலித் மோடியாகட்டும், நரேந்திர மோடியாகட்டும். இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை என கடுமையாகச் சாடினார்.
நீரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி ஆகிய அனைவரும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய ராகுல் பிரதமர் தனது பிரச்சாரத்தின் போது வேலையின்மை, விவசாயிகள் மற்றும் ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதியம் நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதியளித்த ராகுல் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக