புதன், 10 ஏப்ரல், 2019

திருமுருகன் காந்தி .. முற்போக்கு முகமூடி .. சீமானுக்கு போட்டி?

Chelliah Muthusamy : மோடி எதிர்ப்பை திருமுருகன் காந்தி பேசினாலும் இந்த தேர்தலில் மதவாத கும்பலை வீழ்த்த என்ன வழியோ அதைத்
தேர்ந்தெடுப்பதில், அறிவிப்பதில் அவருக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது அவரது புனிதபிம்பத்தை தக்கவைத்துக்கொள்வது.
பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டாம் என்பதை தமிழ்மண்ணில் பிறந்த பாஜககாரனே கூட சொல்லிவிடுவான். பாவம் பாஜகவை வைத்து பிழைக்கவேண்டிய ஒரே காரணத்தால் அவர்களால் சொல்ல இயலவில்லை.
யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொல்லும் பங்குனி க்ரூப்புக்கு யாரை ஆதரிக்கவேண்டும் என்று சொல்ல முடியாததற்கான காரணமாக அவர்கள் சொல்வது யாரும் யோக்கியமல்ல என்பதும் அவர்கள் பரிந்துரைத்த ஆட்சியாளர்கள் தவறுக்கு அவர்கள் பொறுப்பாகமுடியாது என்பதுதான்.
இன்று நாடு நாசமாகப்போனலும் நம்மை யாரும் நாளைக்கு குறைகூற இடமளித்துவிடக்கூடாது என்றுதான் பெரியார் முடிவெடுத்தாரா? இப்படியான முடிவை எடுக்க ஈழத்திலோ தமிழகத்திலோ தமிழ்த்தேசிய தலைவர்கள் திருமுருகனுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கக்கூடும்.
காமராஜரை, திமுகவை பெரியார் ஆதரித்ததால் இவர்களது ஆட்சி மீதான விமர்சனங்களை பெரியார் மீதா வைத்தோம்.

திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், புதியகுரல் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் திமுக கூட்டணியை ஆதரிப்பதால் நாளை இவர்கள்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று எந்த வாக்காளனாவது வந்து நிற்பானா? ஏனெனில் வாக்காளனுக்கு அரசியல் சூழல் குறித்த அறிவும் எடுக்கவேண்டிய முடிவு குறித்த தெளிவும் இருக்கிறது. அரசியல் இயக்கங்களில் அறிவுஜீவி கூட்டமாக தம்மைக் கருதிக்கொள்ளும் பங்குனிகள் மட்டுமே இவ்விசயத்தில் மங்குனிகளாக இருக்கின்றனர்.
அய்யா வீரமணியும் தலைவர் கொளத்தூர் மணியும் எப்படி தங்கள் ஆதரவை திமுக கூட்டணிக்கு எந்த மனத்தடையுமின்றி அறிவிக்கமுடிகிறது. ஏனெனில், தன்முனைப்போ, பிம்பகட்டமைப்போ இல்லாத பெரியாரின் கொள்கைவழி நிற்பவர்கள்.
திருமுருகன் அப்படியல்ல; ஈழமாக இருந்தாலும் தமிழக அரசியலாக இருந்தாலும் அவருக்கு எல்லாவிதமான முற்போக்கு முகமூடிகளும் தேவைப்படுகிறது.
சமுதாயத்தொண்டு செய்கிறவன் மான-அவமானம் பார்க்கக்கூடாது என்ற பெரியாரின் வழியில் நடப்பவனே கருஞ்சட்டை வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளத் தகுதியானவன்.
திருமுருகனின் கருஞ்சட்டை, நீலச்சட்டை, செஞ்சட்டை பேரணி முயற்சியெல்லாம் இந்த அமைப்புகளிலிலிருந்தும் இந்த அமைப்புகளைச் சாராமல் பெரியாரின், அம்பேத்கரின், மார்க்சின் சிந்தனைத் தடத்தில் உதிரியாக பயணிப்போரையும் பங்குனிக்குள் அய்க்கியமாக்க உதவுமே தவிர அதனால், அவர் எதிர்ப்பதாகக் கருதும் மதவாத கும்பலுக்கு வலிமை சேர்க்க உதவுமே தவிர தமிழர் நலனுக்கானதாக மாறப்போவதில்லை.
இப்பதிவின் நோக்கம் திருமுருகன் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்பதல்ல; கருஞ்சட்டை, நீலச்சட்டை, செஞ்சட்டைகள் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதுதான்.
தமிழக அரசியல் களத்தில் ஒரு சீமான் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக