செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சிக்கியது யார் பணம்? துரைமுருகன் பேட்டி பின்னணி!

சிக்கியது யார் பணம்?  துரைமுருகன் பேட்டி பின்னணி!மின்னம்பலம் : திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனையும், அவரது மகனான வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தையும் குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு நடவடிக்கைகள் நேற்று முடிவடைந்துள்ளன.
ரெய்டு முடிவில் துரைமுருகனின் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து சிமென்ட் குடோனில் மட்டும் 11.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதாக நேற்று இரவு வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிந்தன.
சிமென்ட் குடோனுக்குச் சொந்தக்காரரும் திமுகவின் வேலூர் நகர விவசாய அணி துணை அமைப்பாளரான பூஞ்சோலை சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டதில், இந்த 11.5 கோடி ரூபாயும் தன்னுடையதுதான் அதற்குரிய கணக்கைக் காட்டுவதாகவும் இந்தப் பணத்துக்கும் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் வருமான வரித் துறையிடம் எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருக்கிறாராம்.

இதுபோலவே அஸ்கர் அலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கான பதிலை வருமான வரித் துறையிடம் அளித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
துரைமுருகன் வீட்டில் இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்படவில்லை. அனைத்து பெருமளவிலான தொகைகளும் வெவ்வேறு நபர்களிடம் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் அதற்கான கணக்கை அளித்துவிட்டால் வருமான வரித் துறை வேட்பாளரை நெருங்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தப் பின்னணியில்தான் ரெய்டு முடிந்ததும் தனது வீட்டு வாசலில் பேட்டியளித்த துரைமுருகன், “இப்படிப்பட்ட தொல்லைகளை எனக்குக் கொடுத்தால், வெற்றியைத் தடுக்கலாம் என்பது அவர்கள் திட்டம். மூன்று நாட்களாக என் மகன் வாக்கு கேட்பதைத் தடுத்திருக்காங்க. இதன் மூலம் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்ற அரசியல் இந்த சோதனை. முழுக்க முழுக்க அரசியல். என் தலைவர் இடத்தில் என் தளபதி இருந்து ஆறுதல் கூறினார்” என்ற துரைமுருகன் மீடியாக்களைப் பார்த்து, “நீங்களே எது வேணா போட்டுக்கறீங்க…. வந்தார்கள், கேட்டார்கள், எங்கள் பணம் இல்லையென்று சொல்லிவிட்டோம். போய்விட்டார்கள். இதுதான் நடந்தது.
இந்த சோதனை மூலம் வேலூர் மக்களவைத் தேர்தலையும், இரு சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் நிறுத்தலாம் என்பது வெற்றிபெற முடியாதவர்கள் போடும் தப்புக்கணக்கு. துரைமுருகனை அடித்துவிட்டால் மற்ற திமுகவினர் சுணங்கிவிடுவார்கள் என்று கருதி செய்திருக்கிறார்கள்” என்றார் துரைமுருகன்.
இரவில் தன் வீட்டு வாசலில் கூடியிருந்த தொண்டர்களிடம், ‘போயிட்டு வாங்க. நாளையிலேர்ந்து பிரச்சாரத்துக்கு (இன்று) வந்துடறேன்” என்று நம்பிக்கை சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக