சனி, 20 ஏப்ரல், 2019

ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்!

அ.தி.மு.க எடப்பாடி - மோடி
விகடன் : தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நம்மிடம் பேசும் அதிகாரிகள், “தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க-விற்கு சாதமாக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் என்று நாங்கள் கொடுத்த அறிக்கை அப்படியே மாறிவிட்டது.
அ.தி.மு.க பி.ஜே.பி இடையே ஏற்பட்ட கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வாக்குப்பதிவு முடிந்தபிறகு கண்கூடாக எங்களால் அறிந்துகொள்ளமுடிந்தது. இந்தக் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்கூட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும். தேர்தல் முடிவுக்குப் பிறகு நாங்கள் நடத்திய ஆய்வில், நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 இடங்களைக் கண்டிப்பாக தி.மு.க கூட்டணி பெற்றுவிடும்.

நான்கு தொகுதிகளில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியிருக்கும். பிற இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்.
அதேபோல,  18 சட்டமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகள் கண்டிப்பாக தி.மு.க வெற்றிபெறும். ஏழு தொகுதிகளைக்கூட முழுமையாக அ.தி.மு.க வெற்றியைப் பெற்றுவிடும் என சொல்லமுடியாது. அதிலும், சில தொகுதிகளில் தி.மு.க-அ.தி.மு.க இடையே போட்டி அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக, சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க அளித்த 2000 ரூபாய் சில இடங்களில் அ.தி.மு.க-வுக்கு சாதமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கணக்குப்படி தேர்தல் முடிவுகள் வந்தால், அ.தி.மு.க ஆட்சி நீடிப்பது சிக்கலாகிவிடும். அதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்” என்கிறார்கள்.
மாநில உளவுத்துறையோ, “கண்டிப்பாக எட்டு சட்டமன்ற இடங்களில் அ.தி.மு.க வெற்றிபெறும், அடுத்து நடைபெற உள்ள நான்கு தொகுதியில் மூன்றில் வெற்றிபெற்றாலே”போதும் என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள். அ.தி.மு.க தரப்பினர் முதல்வரிடம், “நாம் கண்டிப்பாக  10 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிடுமோம். நம் அளவிற்கு தி.மு.க பணம் கொடுக்கவில்லை. கிராமப்புற பகுதிகளில் நமக்கு நன்றாக வாக்கு விழுந்துள்ளது” என்று சொல்லியுள்ளார்கள். இந்த அறிக்கைகளால் தங்களது ஆட்சி நீடிக்குமா என்ற அச்சம்  இப்போது  அ.தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-தலைமையும் ஐ.பி அறிக்கையை வைத்து எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்க முடிவுசெய்துவிட்டது.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக