திங்கள், 29 ஏப்ரல், 2019

ஃபோனி புயல் தமிழகத்தை ஏமாற்றவில்லை... காப்பாற்றியிருக்கிறது...!

tamil.news18.com - sankaralingam : எதிர்பார்த்தது போல ஃபோனி புயல் தமிழகத்தை நெருங்கியிருந்தால், குடிநீர் பிரச்னை தீர்ந்திருக்காது, இதுவரை கண்டிராத சேதத்தை ஏற்படுத்தியிருக்கும்
தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபோனி புயல், நாளை மறுநாள் மிகத்தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல், தற்போது சென்னையில் இருந்து 880 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. மெதுவாக இந்த புயலானது வடமேற்கு பகுதியில் நகர்ந்து வருகிறது அடுத்த 24 மணி நேரத்தில் ஃபோனி புயல் தீவிரமாக மாறும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இருக்கும் போதே, தமிழகத்துக்கு இதனால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
ஆனால், புயலின் திசை மாறத்தொடங்கியதால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து புயல் நகரத்தொடங்கிய திசையால், ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கே மழை இருக்கும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



ஃபோனி புயல் தமிழக கடற்கரையில் இருந்து 150 கி.மீ தூரம் வரை வந்திருந்தால், ஓரளவு சென்னை உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருந்திருக்கும், இதனால், வறட்சி நீங்கி தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

மேலும், தமிழக கடற்கரையில் இருந்து 300 கி.மீ வரை புயல் வந்திருந்தால் மழை இருக்காது ஆனால், காற்றில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. தரைக்காற்றில் இருக்கும் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால், வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி ஃபோனி புயல் வடக்கு நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளை புயல் நெருங்குவதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் எதிர்பார்த்த வகையில் தமிழக கடற்கரையை நோக்கி ஃபோனி புயல் நகர்ந்திருந்தால், குடிநீர் பிரச்னை தீர்ந்திருக்காது. மாறாக, கஜா, ஒக்கி, வர்தா ஆகிய புயல்கள் ஏற்படுத்திய சேதத்தை விட அதிகமான சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும்.


புயல் நகரும் திசையை காட்டும் வரைபடம்


எப்படி என்று கேட்கிறீர்களா?.. வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஃபோனி புயலானது மே-2-ம் தேதி மிக அதி தீவிர புயலாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது, காற்றானது அதிகபட்சமான 195 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலின் போது காற்று 140 கி.மீ வேகத்தில் வீசியிருந்தது. இதுவே, வர்தா புயலின் போது காற்று 155 கி.மீ ஆகவும், ஒக்கி புயலின் போது காற்று 185 கி.மீ வேகத்திலும் வீசியிருந்தது.

தற்போது ஃபோனி புயலால் 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா, ஒக்கி, வர்தா ஆகிய புயல்கள் ஏற்படுத்திய சேதங்களை நாம் மறக்கவே முடியாது.

எதிர்பார்த்தது போல, ஃபோனி புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வந்திருந்து அதி தீவிர புயலாக மாறி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது போல 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியிருந்தால், ஏற்பட்டிருக்கும் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருந்திருக்கும்.

கஜா, ஒக்கி, வர்தா ஆகிய புயல்கள் ஏற்படுத்திய சேதத்தை விட மிக அதிகமான விளைவுகளை தமிழகம் சந்தித்திருக்க நேர்ந்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக