திங்கள், 1 ஏப்ரல், 2019

வேலூரில் ஏசி சண்முகம்தான் மிகப்பெரிய அளவில் பணத்தை ... கதிர் ஆனந்தை தகுதி நீக்க சதி?

மின்னம்பலம் : திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 1) ஆம் தேதி காலை முதல் மீண்டும் வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி 30 ஆம் தேதி வரை வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் இருக்கும் துரைமுருகன் வீட்டிலும், வேலூர்- சித்தூர் சாலையில் இருக்கும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் ரெய்டு நடந்தது. இதில் அப்போது கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாகத் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் ஒருநாள் இடைவெளி விட்டு இன்று அதிகாலை வேலூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிக்குப்பம் என்ற இடத்தில் உள்ள ஒரு சிமெண்ட் குடோனுக்கு சென்றனர் வருமான வரித்துறையினர். அங்கே சோதனையிட்டதில்தான் தமிழகமே அதிரும் அளவுக்கு மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. புத்தம் புதிய ரூபாய் நோட்டுக் கட்டுகளை அழகாக பேக் செய்து, பேக்கிங்கின் மேல் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளின் பெயர்களும் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான வீடியோக்களையும் கசிய விட்டிருக்கிறது வருமான வரித்துறை.

கண்காணிப்பில் துரைமுருகன் நிழல்கள்
வேலூர் அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது,
“பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது, யாருடைய வங்கிக் கணக்கில் இருந்து எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐந்து பணம் எண்ணும் இயந்திரங்களைக் கொண்டு பணத்தை அதிகாரிகள் எண்ணிவருகிறார்கள். இதற்கு மிகப்பெரிய பின்னணி இருக்கிறது!
29,30 தேதிகளில் துரைமுருகன் வீடு, மகன் கல்லூரி ரெய்டு நடத்தப்பட்டது.வேலூரில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது திமுகவினர் மிகுந்த உரிமை எடுத்துக் கொண்டு வருமான வரித்துறையினரை ஆவேசமாகப் பேசினர். உங்களை எல்லாம் பிடிச்சு ஒரு ரூம்ல அடைச்சு வச்சிருவோம்’ என்றெல்லாம் கூட மிரட்டினார்கள்.
இந்நிலையில் கல்லூரியில் ரெய்டு நடந்து முடிந்தவுடன் இனி வருமான வரித்துறை உடனடியாகத் திரும்பவராது என்ற எண்ணத்தில் கல்லூரியின் மற்ற பகுதிகளில் இருந்த பணத்தை கடந்த இரு தினங்களுக்குள் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

ஆனால் மாநில உளவுத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியில் துரைமுருகனைச் சுற்றியுள்ள நபர்களின் போன்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. அவர்கள் எங்கு போகிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என தீவிரமாக கண்காணித்தார்கள். இதன் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளரைப் போல எப்போதும் அவருடனே இருக்கும் ஆஸ்கர் அலி, துரைமுருகனின் நெருங்கிய நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.
இந்த கண்காணிப்பின் மூலமாகத்தான் மூட்டை மூட்டையாக பணம் பள்ளிக்குப்பத்தில் இருக்கும் பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதை உறுதி செய்துகொண்டனர் வருமான வரித்துறையினர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இன்று அதிகாலை அங்கே சென்றனர். குடோனில் துரைமுருகனுக்கு நெருக்கமான ஆஸ்கர் அலி படுத்திருந்திருக்கிறார். அப்போதே வருமான வரித்துறையினரின் சந்தேகம் வலுவானது. இதையடுத்து குடோனை சலித்தபோதுதான் மூட்டை மூட்டையாக பணம் பக்காவாக பேக் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பக்கத்தில் கல்புதூர் என்ற ஊரில் ஆஸ்கர் அலியின் வீட்டிலும் கோடிக்கணக்கான ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கதிர் ஆனந்த் தகுதி நீக்கமா?
ரெய்டு இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடக்குமா, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்றும் கேள்விகள் அலையடித்துக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி நம்மிடம் பேசிய அமமுக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாணியம்பாடி எம்.ஜே. பாலசுப்பிரமணி முக்கியமான ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்.

“ஆரம்ப கட்டத்தில் வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம்தான் மிகப்பெரிய அளவில் பணத்தை இறக்குவார் என்று மாவட்டம் முழுதும் பேசப்பட்டது. இப்போது திமுக தரப்பில் பணப்பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடு பற்றிய விவரங்கள் அம்பலமாகியிருக்கின்றன. பணப்பட்டுவாடாவுக்காக ப்ராப்பராக திட்டமிட்ட திமுக, ப்ராப்பராக சிக்கியிருக்கிறது.
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருவதாகத் தெரிகிறது.
ஏனெனில் கைப்பற்றப்பட்ட பணம் , திமுக வேட்பாளரின் தந்தை துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்துள்ளது. அதில் திமுக நிர்வாகிகளின் பெயர்களும் டெலிவரி விவரங்களோடு எழுதப்பட்டிருக்கின்றன. எனவே வாக்காளருக்கு பணம் கொடுக்க இருந்ததாக கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் போல தேர்தலை ரத்து செய்யாமல், திமுக வேட்பாளர் இல்லாமல் தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடந்துகொண்டிருப்பதாகத் தகவல். அப்படி நடந்தால் அது பெரும் சர்ச்சையாகும்” என்கிறார் எம்.ஜே.பாலசுப்பிரமணி.
திமுகவோ இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. திமுக வழக்கறிஞர் வில்சன், ‘திமுகவினரை தேர்தல் பணியாற்ற விடாமல் வருமான வரித்துறையினர் தடுக்கிறார்கள்’ என்று முறையீடு செய்தார். உயர் நீதிமன்றமோ இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை எடுத்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறது.
ஸ்டாலின் ரியாக்‌ஷன்
ஏற்கனவே துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி, ‘பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக பயப்படாது. பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகத் தலையிட்டு திமுக மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்த உத்தரவிட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம்” என்றெல்லாம் குற்றம் சாட்டியிருந்தார். இன்று காலை ரெய்டு நடந்துவரும் நிலையில் ஸ்டாலின் வேலூருக்கு அருகே உள்ள அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரெட்சகனுக்கு பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று சோளிங்கரில் பேசிய ஸ்டாலின், “சென்னையில் சபேசன் வீட்டில் நடந்த ரெய்டில் 13 கோடி ரூபாய் எடுத்தீர்களே? அதற்கான வீடியோவை வெளியிட்டார்களா? ஏனென்றால் அந்த சபேசன் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த விவரங்களை வெளியிடவில்லையா? புகார் வந்தது அதனால் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்கிறீர்களே? நான் தருகிறேன். எடப்பாடி வீட்டில் கோடி கோடியாய் பணம் இருக்கிறது, அமைச்சர்கள் வீட்டில் பணம் இருக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்குமா வருமான வரித்துறை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆனாலும் இந்த விவகாரம் திமுகவுக்கு பெரும் நெருக்கடியாகும் என்றே அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக