ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

அரவகுறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டி.. ஸ்டாலின் அறிவிப்பு!

தினமலர் : கரூர்:'அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெறுவார்' என, பிரசார கூட்டத்தில், ஸ்டாலின் அறிவித்தார்.
கரூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டுகேட்டு, ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம், கரூர் அருகே ராயனுாரில், நடந்தது. அதில் அவர் பேசுகையில், 'அரவக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதில், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெறுவார்' என்றார்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அரவக்குறிச்சி தொகுதிக்கும் விருப்ப மனு வாங்கப்பட்டது. அப்போது, செந்தில்பாலாஜி உட்பட, பலர் விருப்ப மனு கொடுத்தனர்.இந்நிலையில், கட்சி தலைவர் ஸ்டாலின், பிரசார கூட்ட மேடையில், செந்தில் பாலாஜி போட்டியிடுவார் என, திடீரென அறிவித்துவிட்டார்.

செந்தில் பாலாஜிக்கு, கட்சியில் சேர்ந்த, 40 நாளில் மாவட்ட பொறுப்பாளர் பதவி, தற்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு, 'சீட்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு, தலைவர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என தெரியவில்லை. இதனால், தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக