திங்கள், 29 ஏப்ரல், 2019

ஷர்மிளா சையத் :துப்பாக்கியையும் குழந்தையையும் பிடித்துக் கொண்டு வீராவேசம் பேசி வெடித்த வெறியர்களை முதன்முதலாக காணுகிறேன்.

Sharmila Seyyid : போர் காலத்தில் ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க
குறைந்தது ஒன்பது சோதனைச் சாவடிகளிலாவது இறங்கவேண்டியதிருக்கும். நோயாளிகள், வயதானோர், கர்ப்பிணிகளைக்கூட சிலபோது இறங்கவைத்தே இராணுவ சோதனை நடக்கும். ஆனால் மடியில் உறங்கும் குழந்தை இருந்தால் ஒரு கருணையோடு இறங்கி நடக்கவிடாமலேயே சோதனையிடுவார்கள். இதற்காகவே சிலர் மடியில் குழந்தையை தூங்கவைத்தபடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். குழந்தைகள் இறைவனுக்கு நிகரானவர்கள் என்ற நம்பிக்கை பொதுவாக இன, மத பேதங்களுக்கு அப்பாலானதாக இருந்தது.
ஆனால் இனி குழந்தையை மடியில் வைத்திருப்பவர்களைக்கூட இரக்கமின்றி பரிசோதிக்கவேண்டிய கட்டாயத்தை கிழக்கிலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இலங்கை IS தீவிரவாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
போரில் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுவதை (கொல்லப்படக்கூடாதென்று மதங்களும், போர் விதிகளும் இருந்தும்) அறிந்திருக்கிறேன். ஆனால் தனது பிள்ளைகளை மடியிலேயே வைத்துக் கொண்டு ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையால் குழந்தையையும் பிடித்துக் கொண்டு வீராவேசம் பேசி வெடித்த வெறியர்களை முதன்முதலாக காணுகிறேன். இதற்கு முன்பு உலகில் யாருக்குமே இந்தளவு வெறிபிடித்திருந்ததாக அறிந்ததேயில்லை. இஸ்லாமோபோபியா ஆதரவும் இந்த வெறி இவ்வளவு நியாயமாக முற்றியதற்கு ஒரு காரணம்.


2  :
முஸ்லிம்களே இஸ்லாத்தை கைவிட்டால் கூட இங்குள்ள இடதுசாரிகள் அதை விரும்ப மாட்டார்கள் போலானதொரு நிலையை ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான அவர்களில் சிலரது நிலைப்பாடுகள் காண்பிக்கின்றன. இவர்களே முஸ்லிம்களிடம் சென்று "இஸ்லாம் உங்கள் மதம், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும், தீவிரமாக பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதா இல்லையா என்பதை முடிவுசெய்யும் உரிமை உங்களுடையது. பேரினவாத சக்திகளோ, முதலாளிகளோ எண்ணெய் அரசியலோ வல்லரசுகளோ அதனை செய்ய அனுமதிக்கக்கூடாது" என்று போதனை செய்யத் தொடங்கிவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.
இடதுசாரி அரசியல் வாசிப்போடு மட்டுமே நின்றிருந்த எனக்கு, இந்திய இடதுசாரிகளே முதலில் நேரடிப் பழக்கத்திற்கு வந்தவர்கள். குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரி செயற்பாட்டாளர்கள், கம்யூனிஸ்ட்டுகளோடு நேரடியான அறிமுகமும் பரிச்சயமும் ஏற்பட்டபிறகு அதன்பால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டேன். ஐயா நல்லக்கண்ணு போன்றவர்களை நேரடியாகப் பார்த்து அறிய நேர்ந்தபோது என்னையும் ஒரு இடதுசாரி என்றெண்ணி பெருமிதமடைந்தேன். இந்தியாவின் தமிழ்நாடு தவிர்ந்த வேறு மாநில இடதுசாரி கொள்கையுடையோரும் இப்போது அறிமுகம். நேபாள் நாட்டில் பெருமலவான இடதுசாரி நண்பர்கள் உள்ளார்கள்.
இலங்கையில் வெகு சில தமிழ் இடதுசாரிகளோடும் சில சிங்கள இடதுசாரிகளோடும் தொடர்பில் இருக்கிறேன். இவர்களை சந்தித்த பின்னர் இடதுசாரிகள் பற்றியிருந்த எனது நல்லெண்ணத்தில் நம்பிக்கையில் விரிசல் உருவாகி வருவதைக் கவலையுடன் உணர்கிறேன். முக்கியமாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான இவர்களது நிலைப்பாடுகளைக் காணுகிறபோது விரைவில் எதிரிகளாகப் பார்க்க நேர்ந்துவிடுமோ என்று வருத்தமாக உள்ளது.
மனித குலத்தின் பெறுமானங்களைச் சிதைக்கும் மத அடிப்படைவாத ஓநாய்களை இவர்கள் வளர்க்க நினைக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம்களுக்கு ஆதரவென்று சொல்லிக் கொண்டு புண்ணை இலேசாக்காமல் அதனை கடித்துப் பெரிசாக்கும் கொசுக்களை மட்டுமே குறிவைக்கிறார்கள். கொசுக்களிடமிருந்து இவர்கள் காப்பாற்ற நினைப்பது அடிப்படைவாதம் என்ற முற்றிய புண்ணையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக