வியாழன், 18 ஏப்ரல், 2019

பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர் ... உளவுத்துறை அதிர்ச்சியாம்

பெண்கள் ஓட்டு: உளவுத்துறை அதிர்ச்சி!மின்னம்பலம் : தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 ஆக உள்ளது. அதில், பெண் வாக்காளர் களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 ஆகவும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆகவும் இருக்கின்றன.
ஆக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் அதிகமாக இருக்கிறது. இன்று காலை தொடங்கி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் செய்தி நிறுவனங்கள் ஒருபக்கம் என்றால் மத்திய, மாநில உளவுத்துறைகளும் களமிறங்கிவிட்டன.
அவர்கள் வாக்குச் சாவடிகளின் அருகேயுள்ள பகுதிகள், வாக்குச் சாவடி வரிசையில் நிற்பவர்கள் ஆகியோரிடம் பேச்சுக் கொடுத்து கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று அறிந்து அதுபற்றி தங்கள் மேலிடத்துக்கு இன்புட்ஸ் செய்திகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக பெண்கள் வரிசை வரிசையாக வந்து வாக்களிக்கிறார்கள் என்றும், அவர்களிடம் பேசியபோது கிடைத்த எதிர்வினைகளையும் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
இந்தத் தகவல்களை அறிந்த உளவுத்துறை மேலிடமும், ஆட்சி மேலிடமும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. அதாவது பிற்பகல் 12 மணி நிலவரப்படியே பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்றும், பெண்கள் தங்கள் மகள், மருமகளை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து வாக்களிக்கிறார்கள் என்றும் உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குறிப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக