புதன், 10 ஏப்ரல், 2019

ராகுல் மதுரையில் சி பி எம் வேட்பாளரை ஆதரித்து பேச வருகிறார் .. வயநாட்டில் சி பி எம் எதிராக களம் காண்கிறார்

vikatan.com - n.ponkumaraguruparan : தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் 'வீக்'காக உள்ள தொகுதிகளின் பட்டியல் ராகுல் காந்தியிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஏப்ரல் 12ம் தேதி மதுரைக்கு ராகுல் காந்தி வருகிறார். தமிழகத்தில் எந்தெந்தத் தொகுதிகள் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு ‘வீக்’காக உள்ளது என்கிற பட்டியல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 12-ம் தேதி,  மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், “காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தேனி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகள் ‘வீக்’காக இருப்பதாக, தனியார் உளவு நிறுவனம் அளித்த ரிப்போர்ட், ராகுல் காந்தியின் பார்வைக்கு சென்றுள்ளது. மதுரையில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனும் தடுமாறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ராகுல் காந்தியின் நண்பரான மாணிக்கம் தாகூர் விருதுநகரில் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்குள்தான் இடைத்தேர்தலைச் சந்திக்கும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியும்வருகிறது. ஆக, மதுரை, விருதுநகர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளை மையப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 12 -ம் தேதி, திருப்பரங்குன்றத்தில் ‘ரோடு ஷோ’ நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேனி செல்லும் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர், கிருஷ்ணகிரியில் செல்லக்குமாருக்காக பிரசாரம் செய்கிறார். பொதுக்கூட்டம் நடத்துவதுகுறித்து இதுவரை எதுவும் முடிவெடுக்கவில்லை’’ என்றனர்.
வடமாநிலங்களில் செய்ததுபோன்று, தமிழகத்தில் முதல்முறையாக சாலை மார்க்கமாக மக்களை சந்திக்கும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினம் மயிலாடுதுறை, சிதம்பரம் தொகுதிகளில் பிரசாரம் செய்ய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரம் ஒதுக்கியுள்ளார். ராகுல் காந்தியின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, அவரது நேரத்தையும் மாற்றியமைக்கும்படி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி  போட்டியிடுகிறார். வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து சி.பி.எம் கட்சி போட்டியிடுகிறது. கூட்டணிக்குள் இருந்துகொண்டே, தனது வேட்பாளருக்கு எதிராக ராகுல் காந்தி களமிறங்குவதை சி.பி.எம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “ராகுல் காந்தியை தோற்கடித்தே தீருவோம்’’ என சி.பி.எம் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில், மதுரையில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்ட ராகுல் காந்தி வரவிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக