செவ்வாய், 23 ஏப்ரல், 2019

நாகை: ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 90 குழந்தைகள் மயக்கம்!

மின்னம்பலம் : நாகை: ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்!நாகப்பட்டினம் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வானகிரியில் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்று (ஏப்ரல் 22) காலையில் இந்த கோயிலில் கும்பாஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகம் நடந்த கோயிலின் அருகே நிறைய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அங்கு விற்கப்பட்ட ஐஸ்க்ரீமை நிறைய குழந்தைகள் வாங்கி சாப்பிட்டனர். இவர்களில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் பூம்புகார் திருவெண்காடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குக் குழந்தைகளைத் தூக்கிச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பிறகு சீர்காழி, மயிலாடுதுறையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் மின் விசிறிகள் இல்லையென்று புகார் தெரிவித்தனர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.
இந்த விவகாரத்தில் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி இரண்டு மாதங்கள் ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக