வியாழன், 18 ஏப்ரல், 2019

கொடுத்த பணத்தில் சுமார் 60% தான் போய் சேர்ந்திருப்பதாக எடப்பாடிக்கு ரகசிய ரிப்போர்ட்..

டிஜிட்டல் திண்ணை: எச்சரித்த எடப்பாடி... எதார்த்தம் புரிந்த தினகரன்... ஏமாற்றிய ஸ்டாலின்மின்னம்பலம் : “நாளை தேர்தல் இன்று வரை தமிழகத்தில் ரெய்டுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பறக்கும் படைகள் சுற்றிச் சுற்றி வந்தாலும் கட்சிகளின் பக்காவான படைகள் பண விநியோகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன.
அதிமுக சார்பில் ஓட்டுக்கு 500 ரூபாய் என்று திட்டமிட்டு பின் 300 ஆக குறைத்தார்கள். அதேநேரம் சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு 2 ஆயிரம் என்று வாரி வழங்குகிறார்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோதே அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு லட்சம் பேருக்கு பணம் கொடுத்தது அதிமுக. அப்போதே அதாவது ஜெயலலிதா இருக்கும்போதே அதில் பல தொகுதிகளுக்கு பணம் முழுதாக போய் சேரவில்லை என்ற புகார் எழுந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா உடல் நலம் குன்றிவிட்டதால் அதுபற்றி பெரிதாக விசாரணை நடக்கவில்லை.
இப்போது ஜெயலலிதா இல்லை என்ற தைரியத்தில் அதிமுகவினர் பல இடங்களில் வாக்காளர்களுக்காக கொடுக்கப்பட்ட தொகையில் கைவைத்துவிட்டார்களாம். கொடுத்த பணத்தில் சுமார் 60% தான் போய் சேர்ந்திருப்பதாக எடப்பாடிக்கு ரகசிய ரிப்போர்ட் போயிருக்கிறது.
பிரச்சாரம் முடித்த கையோடு இந்த விவாகரம் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் வாட்ஸ் அப் கால் போட்டு, ‘கொடுத்தது எல்லாம் ஒழுங்கா போய் சேரலைன்னா கிளைச் செயலாளரா இருந்தாலும் தப்பிக்க முடியாது’ என்று எச்சரித்ததை அடுத்து கடைசி நேரத்தில் அதிமுக சார்பில் மீண்டும் விநியோகம் சூடுபிடித்திருக்கிறது.
அதிமுகவில் இப்படி என்றால் டிடிவி தினகரன் வழக்கம்போல வெகு கூலாக இந்த விவகாரத்தை டீல் செய்திருக்கிறார். அவரது வேட்பாளர்கள் பலரும் பசையுள்ளவர்கள். தென் சென்னை இசக்கி சுப்பையாவில் ஆரம்பித்து தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக முருகேசன் என பலரும் கோடீஸ்வரர்கள்தான். அதனால் அவரவர் மக்களவைத் தொகுதிகளை அவரவர் பார்த்துக் கொள்கிறார்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் தாராளமாக செலவழித்திருக்கிறார் தினகரன். அதேநேரம் மக்களவைத் தேர்தலில் தலைமையிடம் இருந்து பணம் சென்றது சில தொகுதிகளுக்குத்தானாம்.
ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 3 தொகுதிகளில் தனக்கு பலமான செல்வாக்கு இருப்பதாக பிரைவேட் சர்வே ஒன்றின் மூலமாக அறிந்துகொண்டார் தினகரன். அதனால் அந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் சிறப்பு கவனம் எடுத்து 60% வாக்காளர்களுக்கு 250 ரூபாய் என்று தலைமையே அனுப்பியிருக்கிறதாம். அதாவது தினகரனின் செல்லப் பிள்ளைகளாக இந்தத் தொகுதிகள் கருதப்படுகின்றன. அதேநேரம் மற்ற தொகுதிகளுக்கும் சராசரியாக வேட்பாளர்களையே செலவு செய்யச் சொன்ன தினகரன், ‘என்னை நம்புங்க. இனிமே நம்ம காலம்தான். உங்களால முடிஞ்சதைக் கொடுங்க. நான் உங்க எல்லாருக்கும் திரும்பக் கொடுக்குறேன்’ என்று உறுதியளித்திருக்கிறாராம். அதை நம்பி பல வேட்பாளர்கள் பணத்தை இறைத்திருக்கிறார்கள்.
அடுத்து திமுகவில் பல நிர்வாகிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் சண்டை போட்டுக் கொள்ளாத குறைதான். காரணம், பணம் வரும் வரும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடைசியில் வந்ததோ ஓட்டுக்கு 100 ரூபாய் மட்டும்தான். அதுவும் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், பொன்முடி மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட விஐபி தொகுதிகளுக்கு தலைமை கவனிப்பு ஏதுமில்லை. தலைமை கவனிக்கும் என்று காத்திருந்த அவர்களும், அத்தொகுதி நிர்வாகிகளும் கடைசி நேரத்தில் பணத்துக்கு அலைந்ததை பல திமுக நிர்வாகிகள் மறக்கமாட்டார்கள். ஒரு ஸ்டார் வேட்பாளர் தனக்கு நெருக்கமான சிலரிடம் நேற்று மாலை வரை, ‘ஒரு நாலு கோடி இருந்தா கொடுத்தனுப்புய்யா... முடியலைய்யா’ என்று கதறியிருக்கிறார். இந்த அளவுக்கு ஸ்டாலின் ஏமாற்றுவார் என்று நினைக்கவில்லை என்கிறார்கள் திமுகவில். தேர்தல் முடிந்ததும் இதுபற்றிய பல கண்ணீர் புகார்களும், கோபப் புகார்களும் வெளியே வரக் கூடும்.
நாளை வாக்குப் பதிவு நடக்க இருக்கும் நிலையில் எடப்பாடி,ஸ்டாலின், தினகரன் ஆகியோரின் சூழலும், அவர்களது கட்சி நிர்வாகிகளின் நிலையும் இதுதான்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக