வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஃபனி புயல் 50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் ....?

tamil.indianexpress.com :  தமிழ்நாடு வெதர்மேன்" பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது.
வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெறுவதாகவும், வரும் 28-ம் தேதி தமிழக கடற்கரை பகுதியை நோக்கி புயல்(ஃபனி) வர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் இன்று (ஏப்.25) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இந்த தாழ்வு பகுதி நாளை (ஏப்.26) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இது 27, 28-ம் தேதிகளில் புயலாக வலுப்பெறும். அந்த புயல் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளுக்குள் ரும்போது சென்னை உள்பட பல இடங்களில் மழை இருக்கும். தற்போது வரை தமிழக கடற்கரை பகுதியை கடந்து செல்லலாம் அல்லது கடற்கரை பகுதியை ஒட்டியவாறு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடற்கரை பகுதியை கடந்து சென்றால், தென் தமிழகத்தின் பகுதியாக நுழைந்து கேரளாவுக்கு செல்லும். கடற்கரை பகுதியை ஒட்டியவாறு கடந்து சென்றால் ஆந்திராவை நோக்கி செல்லும். கடற்கரை பகுதியை ஒட்டி செல்லும்போது அதன் இடைவெளி 200 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் என்று இருந்தால் மழை இருக்காது” என்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது. இதற்கு முன்னதாக 1966ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியிருக்கிறது. அதன்பிறகு, 50 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் கடலூர் வழியாக கடந்தால் கடலூர், வேலூர் ஆகிய பகுதிகளில் மிக கண மழை இருக்கும். அதுவே சென்னையில் கடந்தால் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கண மழை இருக்கும்.

இன்னும் 2 நாட்கள் இருப்பதால், இப்போதே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. இப்போதைக்கு 60 % மட்டுமே நம்மால் கூற முடியும். இரண்டு நாட்கள் கழித்து தெளிவாக சொல்ல முடியும். ஆகையால், மக்கள் இப்போதே பதட்டப்பட வேண்டாம்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக