புதன், 17 ஏப்ரல், 2019

தேர்தல் நேர்மையாக நடைபெற்றால் பாஜகவுக்கு 40 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது ..பாஜக தலைவர் அஜய் அகர்வால் கணிப்பு

மின்னம்பலம் : பாஜக தோல்வியடையும்: பாஜக தலைவரின் கணிப்பு!பாஜக தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஜய் அகர்வால் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டவர். அவர் தற்போது பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மோடி மீது முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றால் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறாது என அவர் தெரிவித்துள்ளார்.
மோடி நன்றிகெட்ட மனிதர் என்று குற்றம்சாட்டியுள்ள அஜய் அகர்வால் தனது கடிதத்தில், “குஜராத் தேர்தலின்போது 2018ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று ஜங்புராவில் மணி சங்கர் அய்யரின் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகளிடையே நடைபெற்ற சந்திப்பு குறித்த தகவல்களை நான் வெளியிட்டேன். நான் அத்தகவல்களை வெளியிடாவிடில் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும். பின்னர், இந்தச் சந்திப்பையும், தேசிய பாதுகாப்பையும் இணைத்துப் பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரைகளில் பேசிவந்தார். ஏறத்தாழ தோல்வியை நெருங்கிவிட்டபோதிலும் பாஜக தேர்தலில் வெற்றிபெற்றது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முறை ரேபரேலி தொகுதியில் அஜய் அகர்வாலுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜங்புராவில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பான விவரங்களை அஜய் அகர்வால் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ் அமைப்பே ஒப்புக்கொண்டதாக அஜய் கூறுகிறார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலேவுடன் தான் உரையாடும் அலைபேசி அழைப்பு ஆடியோவையும் அஜய் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோவில், அகர்வால் வெளியிட்ட தகவல்களால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஹோசபலே கூறுகிறார். இந்த மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அஜய் அகர்வால் தனது கடிதத்தில், “எனக்குப் பிரதமர் மோடியை 28 ஆண்டுகளாகத் தெரியும். நானும் அவரும் அசோகா சாலையிலுள்ள பாஜக அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான முறை ஒன்றாக உணவு அருந்தியுள்ளோம். இருந்தாலும் நான் முறையாக நடத்தப்படுவதில்லை. ரேபரேலி தொகுதியின் தேர்தல் வரலாற்றில் 1,73,721 வாக்குகள் பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் நான் மட்டும்தான்.
காந்தி குடும்பத்தின் கோட்டையான ரேபரேலியில் பாஜகவின் செல்வாக்கை நான் உயர்த்தினேன். 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய தேர்தல்களில் ரேபரேலியில் பாஜக வேட்பாளர்கள் மிகச் சொற்பமான வாக்குகளையே பெற்றனர். ஏற்கெனவே தனது பெயரில் களங்கம் கொண்ட வேட்பாளரை ரேபரேலியில் போட்டியிட வைத்துள்ளனர். பாஜகவுக்கு அத்தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் கிடைக்காது
மரியாதைக்குரிய எல்.கே.அத்வானி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஒட்டுமொத்த நாடே விரும்பியது. ஆனால், குஜராத்தில் தோல்விக்கான அறிகுறிகள் தென்பட்டது. ராம்நாத் கோவிந்தைக் குடியரசு தலைவராக்கி குஜராத்தில் கோலி சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்ந்தது பாஜக தலைமை.
எங்களைப் போன்ற மற்ற கட்சிப் பணியாளர்களை நீங்கள் (மோடி) அடிமைபோலப் பயன்படுத்துகிறீர்கள். எங்களது வீடுகளை விட்டுவிட்டு 24 மணிநேரமும் நாங்கள் உங்களுக்காக உழைக்கிறோம். ஆனால், எங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. இந்த நாட்டிலேயே நீங்கள்தான் (மோடி) மிகப்பெரிய புத்திசாலி; உங்களுக்கு யாருடைய அறிவுரையும் உதவியும் தேவையில்லை. அதனால்தான் நீங்கள் யாருடனும் ஆலோசிக்காமல், அரசைத் தயாராக்காமல் பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிட்டீர்கள்.
பணமதிப்பழிப்புக்குப் பிறகு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் கோடி தொகையாவது திரும்ப வராது என நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள். ஆனால், 99 விழுக்காடு தொகையும் வந்துவிட்டது. அவற்றில் பெருமளவில் கள்ள நோட்டுகள் இருந்தன. கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்வதற்குச் சில வங்கிகளும் உடந்தையாக இருந்துள்ளன. அது குறித்து இன்று வரையில் எந்த விசாரணையோ விளக்கமோ இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அஜய் அகர்வாலின் கடிதம் குறித்து அவரிடம் தி வயர் ஊடகம் தொடர்புகொண்டு பேசியபோது, “பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் பாஜக பணியாளர்கள் மோசடி செய்தது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். பாஜகவை விட்டு அவர் விலக வாய்ப்புள்ளதா என்று கேள்வியெழுப்பியபோது, “இந்தக் கட்சி யாருக்கும் சொந்தமானதல்ல. நான் வெளியேறப்போவதில்லை” என்று தெரிவித்தார்.
நன்றி: தி வயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக