சனி, 6 ஏப்ரல், 2019

360 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு!

360 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு!மின்னம்பலம் : பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் வரும் திங்களன்று (ஏப்ரல் 7) விடுவிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். விடுவிக்கப்படும் மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்கும்படி டெல்லியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்துக்கு அண்மையில் இந்திய அரசு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் சிறைகளில் 385 இந்திய மீனவர்கள் உள்ளனர். அவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவர அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் மொத்தம் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு 100 கைதிகள் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அவர்களை ஒப்படைக்கிறது. ஏப்ரல் 29ஆம் தேதியுடன் முழுவதுமாக அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர்.
விடுவிக்கப்படும் 360 மீனவர்களில் 355 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்த குஜராத் மீனவர் ஒருவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக