ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jeevan Prasad : · இன்றைய தாக்குதல்களின் பின்னணியில் சஹரான் ஹசீம்
மற்றும் அபூ மொகமட் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சஹரான் ஹசீம் (படத்தில் உள்ளவர்) சங்கரிலா 5 நட்சத்திர விடுதி குண்டு வெடிப்பு சமயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தி இறந்தவராவார். அபூ மொகமட் மட்டக்களப்பு தாக்குதலின் பின்னணியில் இருப்பவர் எனவும் இந்திய ஊடகங்கள்
தெரிவித்துள்ளன. அவர் பேசும் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது
தினத்தந்தி : கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமான தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடக்க உள்ளதாக இலங்கை காவல்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 11–ந் தேதி, உளவுத்துறை எச்சரிக்கையை அவர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.‘‘தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முக்கியமான தேவாலயங்களையும், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தையும் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடந்த புத்தர் சிலைகள் உடைப்பு மூலம் பலருக்கும் தெரிய வந்த இயக்கம் ஆகும். இப்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்தஒரு இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கிடையே ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக