ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

பொன்னமராவதி கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள்

புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்தினத்தந்தி :புதுக்கோட்டை அருகே கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொன்னமராவதி, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18-ந் தேதி இரவு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம், போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் 6 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து பொன்னமராவதி, திருமயம், அன்னவாசல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை அருகே 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா பகுதிக்கு மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பொன்னமராவதி போலீசார் நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்ட 1,000 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் பொன்னமராவதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. பின்னர் மாலையில் புதுக்கோட்டையில் இருந்து 4 அரசு பஸ்கள் மட்டும் பொன்னமராவதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. நேற்று மதியத்துக்கு பிறகு பொன்னமராவதியில் சில கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பஸ் நிலையம் மற்றும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், குடுமியான்மலை, பரம்பூர், காட்டுப்பட்டி, கந்தர்வகோட்டை, ஏம்பல் உள்பட பல கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தந்த பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காட்டுப்பட்டியில் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. பின்னர் அந்த சமூகத்தினர் ஊர்வலமாக சிங்கம்புணரி தாசில்தார் அலுவலகம், கிருங்காகோட்டை விலக்கு ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர்.

பின்னர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அவர்கள், கொட்டாம்பட்டியை அடுத்த பாண்டாங்குடி விலக்கு பகுதியில் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கீழவஸ்தாசாவடி அருகே நேற்று குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக