திங்கள், 1 ஏப்ரல், 2019

வசூலித்த ரூ.10 ஆயிரத்தில் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு மீதியை கொடுங்க: கமலுக்கு விருப்ப மனு அளித்த எஸ்.ஐ. கடிதம்

ஓய்வு எஸ்.ஐ. புகழேந்தி, கமல்
tamil.thehindu.com/ மு.அப்துல் முத்தலீஃப் மக்கள் நீதிமய்யத்தில் விருப்பமனுக்காக கட்டிய பணத்தில் 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு மீதியை தாருங்கள் என நடிகர் கமல் ஹாசனுக்கு ஓய்வுப்பெற்ற உதவி ஆய்வாளர் கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அரசியல் நேர்மை, ஊழலில்லாத ஆட்சி, ஊழல் கட்சிகளுடன் கூட்டில்லை என அறிவித்துள்ளார். அவரது கட்சியில் ஆர்வத்துடன் இணைந்த பலர் பின்னர் விலகினர்.
அனைவரும் சொன்ன ஒரே விஷயம் அவர் கட்சியை கட்சி மாதிரி நடத்தவில்லை, அவரைச் சுற்றி ஒரு கூட்டம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். அவரைச்சுற்றி அறிவாளிகள், சினிமா தரப்பினர் கூட்டம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் 40 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய விருப்பமனு மக்கள் நீதி மய்யத்தில் பெறப்பட்டது. அதில் மக்கள் நீதி மய்யம், மன்ற உறுப்பினர்களைத்தாண்டி பொதுமக்களும் விருப்பமனு அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்ததாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டது. நேர்க்காணலும் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 24-ம் தேதி வேட்பாளர்களை கமல் அறிவித்தார். அதில் 90 சதவிகிதத்தினர் தொழிலதிபர்கள், ஓய்வு ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதி, சினிமா பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என இருந்தது.
மன்றத்து ஆட்கள் ஒருவர் கூட இல்லை என்ற விமர்சனமும், சாதாரண நிலையில் உள்ள ஆட்களும் இல்லை என்கிற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் விருப்பமனுவை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம் என்கிற அடிப்படையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ புகழேந்தி என்பவரும் ஒருவர்.
நாகை பாராளுமன்றத்து சீட் கேட்டு நேர்க்காணல் நடத்தப்பட்ட 3 பேரில் யாருக்கும் தராமல் ஓய்வு ஜட்ஜ் ஒருவருக்கு அத்தொகுதி அளிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஓய்வு எஸ்.ஐ. புகழேந்தி கமல் ஹாசனுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வணக்கம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த நான், தமிழக காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப்பெற்று ஓய்வூதியத்தில் காலம் தள்ளுகிறேன். பொதுமக்களுக்கு சேவை செய்யும் அடிப்படையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருத்துறைப்பூண்டி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டேன்.
இம்முறை தாங்கள் மக்கள் நீதிமய்யம் அல்லாத உறுப்பினர்களும் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்ததை வைத்து ரூ.10 ஆயிரம் கட்டி விருப்பமனு அளித்தேன். விருப்பமனு அளிக்கும்போதும், நேர்க்காணலின்போதும் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டேன்.
அதன்பின்னர் நாங்கள் தேர்வு செய்யப்பட்டோமா? இல்லையா என்கிற எந்த தகவலும் இல்லாத நிலையில் திடீரென வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்தீர்கள். மக்கள் நீதிமய்யத்தால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பார்க்கும்போது இப்படிப்பட்டவர்களைத்தான் அறிவிக்கப்போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் 10 ஆயிரம் ரூபாய் கட்டி விருப்பமனு அளித்திருக்க மாட்டோம்.
விருப்பமனு பணம் திரும்ப அளிக்கப்படாது என அறிவித்து பணத்தை வாங்கினீர்கள். இதன்மூலம் உங்களுக்கு ரூ. 1 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. நான் ஓய்வுப்பெற்று ஓய்வூதியம்மூலம் குடும்பம் நடத்திவரும் சாமானியன்.
எனக்கு ரூ.10 ஆயிரம் பெரிய தொகை. விருப்பமனுவில் பணத்தை திரும்ப கேட்கமாட்டேன் என கையெழுத்திட்டாலும் எனது ஏழ்மை நிலை கருதி அதில் உங்கள் செலவுக்கு ஒரு ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு மீதி ரூ.9 ஆயிரத்தை தாருங்கள்” என கேட்டு வங்கிக்கணக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கடிதம் எழுதியிருந்த ஓய்வு எஸ்.ஐ புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நீங்கள் விருப்பமனு அளித்தபோது கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக எழுதியுள்ளீர்களே என்ன நடந்தது?
நான் மக்கள் நீதி மய்ய அறிவிப்பைப்பார்த்து நாகை தொகுதிக்காக விருப்பமனு கேட்டு போனேன். அது ஒரு கட்சி அலுவலகம் போன்றே இல்லை. ஏதோ கார்பரேட் கம்பெனி நடத்துவதுபோல் அப்புறம் வா, 10 மணிக்கு மேல் வா என்றார்கள். 10 மணிக்குச் சென்றால் ஒரு கிளர்க் மேடம் படிவத்தை எடுத்து கொடுத்தார்.
பெயர் விலாசம் எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் நானும் எனது நண்பரும் 10 ஆயிரம் டிடி இணைத்து படிவத்தை கட்டினோம். கூப்பிடுவார்கள் என்று அலட்சியமாக சொல்லி அனுப்பி விட்டார்கள்.
அதன்பின்னர் நேர்க்காணலில் என்ன நடந்தது?
நேர்க்காணலுக்கு கூப்பிடவே இல்லை, பணம் பத்தாயிரம் கட்டியும் எந்த தகவலும் இல்லை. இதனால் எங்கள் ஊர் மக்கள் நீதிமய்ய அமைப்பாளரிடம் சொன்னேன். அவர் யாரிடம் பேசினார் என்று தெரியவில்லை, அழைத்தார்கள் நேர்க்காணலுக்கு போனவுடன் உள்ளே போகும்போது செல்போனை வாங்கிக்கொண்டார்கள்.
உள்ளே போனபோது உள்ளே நேற்று சேர்ந்த கோவை சரளா உள்ளே அமர்ந்திருந்தார். செயற்குழு உறுப்பினரான அவர் இண்டர்வியூ எடுக்கிறார், அறையில் கமலுடன் சேர்ந்து 6 பேர் இருந்தார்கள். கோவை சரளாதான் முதல் கேள்வி கேட்டார். என்ன தொழில் செய்கிறீர்களென்று கேட்டார்.
எவ்வளவு செய்வீர்கள் என கேட்டார்கள் ரூ.1 லட்சம் செலவு செய்வேன் என தெரிவித்தேன். தேர்தல் குறித்து பல கேள்விகள் கேட்டார்கள் பதில் சொன்னேன். யார் அனுப்பி வந்தீர்கள் என கமல் கேட்டார்.
நேர்க்காணலுக்குப்பின் என்ன நடந்தது?
நேர்க்காணலில் அவர்கள் நடத்தியவிதம் என்மனதில் உறுத்தலாகவே இருந்தது. அதன்பின்னர் மன்ற நிர்வாகி நாகை தொகுதிக்கு விருப்பமனு அளித்த 3 பேரை அழைத்து அறிமுகக்கூட்டம் நட்த்தினார். 3 பேரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மற்றவர்கள் ஆதரித்து வேலை செய்யவேண்டும் என்று முடிவானது.
பின்னர் வேட்பாளர் அறிவிப்பில் உங்கள் பெயர் வரவில்லையா?
வேட்பாளர் அறிமுகக்கூட்டத்துக்குக் கூட அழைப்பில்லை, எங்கள் விருப்பமனு நிலை குறித்தும் தகவல் இல்லை, தேர்வு செய்யப்பட்டோமா இல்லையா என எதுவும் தகவல் இல்லை. வேட்பாளர் அறிமுகக்கூட்டத்துக்குக்கூட தகவல் இல்லை. தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துக்கொண்டோம்.
நாகை தொகுதியில் விருப்பமனு கொடுத்த யாருக்குமே சீட்டுக்கொடுக்காமல் குருவைய்யா எனும் ஓய்வு ஜட்ஜுக்கு கொடுத்துள்ளார்கள். அவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரே அல்ல. இதுப்போன்று திருவாரூர், தஞ்சை தொகுதிகளிலும் ஏகப்பட்ட குளறுபடி.
என்னைப் பொறுத்தவரை அனைவருமே தொழிலதிபர்கள், ஓய்வு ஜட்ஜ், ஐபிஎஸ், ஐஏஎஸ், வழக்கறிஞர்கள், சினிமாக்காரர்கள் என உள்ளனர். இவர்கள் எல்லாம் மன்றத்தில் இருந்தவர்களா? மன்றத்தில் உள்ளவர்களுக்குத்தானே கொடுக்கணும்.
எத்தனைபேரிடம் விருப்பமனு பெற்றார்கள்?
1137 என்று பேப்பரிலேயே போட்டார்களே, அதில் 150 பேர் கமலுக்காக விருப்பமனு அளித்தவர்களாம். இதன்மூலம் ஒரு கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது.
விருப்பமனுவில் பணம் திருப்பித்தரமாட்டோம் என்று சொல்லித்தானே பெற்றார்கள்?
ஆமாம் அப்படித்தான் விருப்பமனுவிலேயே ரூ. 10 ஆயிரத்தை திரும்ப கேட்கமாட்டோம் என எழுதி வாங்கினார்கள்.
பின்னர் ஏன் திரும்ப கேட்கிறீர்கள்?
என்னுடைய நிலை அப்படி உள்ளது. ஓய்வூதியம் வாங்கித்தான் வாழ்க்கை ஓடுகிறது. அதனால்தான் உங்கள் செலவுக்கு ரூ. 1000-ஐ வைத்துக்கொண்டு மீதி 9000 ரூபாயை தாருங்கள் என கடிதம் எழுதினேன். இன்னும் பதில் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக