செவ்வாய், 12 மார்ச், 2019

கிருபா முனுசாமி : இந்திய அரசமைப்பு(Indian Constitution) பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறதா?

நான் ஒரு முதல் தலைமுறை வழக்கறிஞர். என்னை அந்தத் துறையில் யாருக்குமே தெரியாது. என் அப்பாவின் நண்பர்கள் யாரும் அங்கே கிடையாது. இரண்டாவது என் தோற்றம். பார்ப்பதற்கு ஒரு ஆதிக்க சாதிப் பெண்போல் வெள்ளையாக உயரமாக நான் இருந்தேனென்றால் என் தோற்றத்தின் அடிப்படையில் ஒரு மரியாதை கிடைக்கும். இங்கே அதுவும் இல்லை. மூன்றாவதாக, நான் ஒரு தென்னிந்தியப் பெண். நான் தில்லியில் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் வட இந்தியர்கள் நிறைந்த ஒரு பகுதியில் இனத்தின் அடிப்படையிலும் ஒரு பாகுபாட்டினை சந்திக்கிறேன். தமிழ் நாட்டிலிருந்து, தமிழ் பேசுகிற கறுப்பு நிறப் பெண்ணாக நான் நீடிமன்றத்தில் நிற்கும் போது, நான் பல நிலைகளில் பாகுபாட்டினை சந்திக்கிறேன்.
மகளிர் தின வாழ்த்துகள்! இந்த வருட மகளிர் தினத்தை நான் சென்ற மாதம்
சந்தித்த, என்னை சிந்திக்க வைத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி Kiruba Munusamyஅவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!
எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் காலை எழுந்தவுடன் சன்னல் வழியாக வெளியே பனிப்பொழிவைப் பார்த்தவர், குழந்தை போல் துள்ளிக் குதித்து, காமிராவில் படம் எடுத்து, செல்பேசியில் வீடியோ கால் போட்டு ஊரில் உள்ள தன் அக்கா, அக்கா பிள்ளைகள், மாமா எல்லோரிடமும் பனிப்பொழிவைக் காட்டி மகிழ்ந்தார். அட, என்ன இப்படி சின்ன பெண் போல் இருக்கிறாரே என்று நினைத்தேன். வயதில் என்னை விட மிகச் சிறியவர், ஆனால் சாதனைகளிலும் செய்து வரும் பொதுச் சேவைகளிலும் மிக
உயர்ந்தவர். அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தச் சுட்டியை க்ளிக் செய்யவும்.
https://www.justiceandpeace.nl/…/kiruba-fighting-caste-cr…/…
அவருடன் நடந்த ஒரு நீண்ட உரையாடலின் முதல் பகுதியை இங்கே பகிர்கிறேன்.
கேள்வி: நமது இந்திய அரசமைப்பு(Indian Constitution) பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறதா?

கிருபா: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஆண் பெண் என்கிற வேறுபாடு கிடையாது. எந்த ஒரு இடத்திலும், ஆண்களுக்கு முன் உரிமை கொடுக்கக்கூடிய சட்டப் பிரிவுகள் எதுவுமே இல்லை. ஆனால் பெண்களுக்காக சில இட ஒதுக்கீடுகள் வழக்குவதற்கும், பெண்களுக்கான நலத்திட்டங்கள் உருவாக்குவதற்கும் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் இந்திய அரசமைப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு பெண்களுக்கான 33 சதவிகித சொத்து உரிமைச் சட்டம், பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாட்டை நீக்குவதற்காக சட்டப் பிரிவுகள் இருந்ததால் தான் சாத்தியமானது. எல்லா வகையிலும் முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே ஒரு பெண் ஜனாதிபதியாக வர இயலவில்லை. ஆனால் இந்தியாவில் பெண் ஜனாதிபதி, பெண் பிரதமர், பெண் மாநிலத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் இந்திய அரசமைப்பு பாலினப் பாகுபாடு மட்டுமன்றி, சாதி, மதம், இனம், மொழி போன்ற எந்தவிதப் பாகுபாடுமற்ற சமத்துவமான ஒன்று.
கேள்வி: இந்தியாவில் பெண்கள் என்ன விதமாக பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்களை அனுகி சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்?
கிருபா: விவாகரத்து மற்றும் குடும்ப வன்முறை – இவற்றிற்கு அதிகம் பெண்கள் வழக்கறிஞர்களை அனுகுகிறார்கள். இந்திய சமூகத்தைப் பொறுத்த வரையில் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் இந்த மாதிரி சில கற்பிதங்கள் மூலமாக திருமண பந்தத்தை ஒரு புனிதமாக கட்டமைக்க முயற்சிகள் காலம் காலமாக நடந்திருக்கிறது. வாலண்டைன்ஸ் டே அன்று பார்த்தீர்களென்றால், இந்து முன்ன்னி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கலாச்சார சீர்கேடு என்று சொல்லிக்கொண்டு காதலர்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பதைக் கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட நாட்டில் திருமணமான பெண்களுக்கு குடும்பத்திற்குள் ஏற்படும் வன்முறையினால் அவர்களால் எளிதாக வெளியே வரமுடிகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். என்னிடம் உதவி கேட்டு வந்த சில பெண்கள், நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள். இவ்வளவு படித்த நீங்கள் ஏன் இத்தனை அடிகள், கொலை முயற்சிகளை தாங்கிக் கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டபோது, தம் பெற்றோர்கள், குறிப்பாக அம்மாக்கள், எல்லாம் சரியாகிவிடும், பொறுமையாக இரு என்று வலியுறுத்தியதாகச் சொன்னார்கள். அப்பாக்களிடம் ஒரு சுதந்திரமான உறவு இல்லாததால் தான் பெண்கள் தம் பிரச்சினைகளை அம்மாக்களிடம் முதலில் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்களிடம் அம்மாவும் ஒரு நம்பிக்கையற்ற பதிலை அளிக்கும்போது வேறு வழியில்லாமல் குடும்பத்திற்குள்ளேயே இருந்து ஏதாவது செய்யமுடியுமாவென்று முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளெல்லாம் தோற்றுப் போய் இறுதிக்கட்டத்தில் தான் வெளியே வருகிறார்கள். அதற்கு அடுத்த கட்டம் விவாகரத்தாகத் தான் இருக்கிறது. அதுவரை அவர்கள் அனுபவித்த கொடுமைக்காக புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. தன் குழந்தைகளின் நலனுக்காக அந்தக் கணவனிடம் இருந்து பண உதவி பெறுவதையும் கூட பெரும்பாலும் பெண்கள் விரும்புவதில்லை. தன்னை விட்டால் போதும் என்கிற ஒரு மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். இதில் முக்கியமாகப் பெண்களுக்குத் தடையாக இருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்கள் தான். இந்தியாவில் வாழும் பெண்கள் இப்படியென்றால், திருமணம் ஆகி அமெரிக்கா போகும் பெண்கள் அனுபவிக்கும் சிக்கல்களும் மோசமானவை. மாட்ரிமோனியலில் அமெரிக்க மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணமாகிப் போகும் பெண்கள், மேலும் கவனமாக இருக்கவேண்டும். இரு குடும்பச் சந்திப்பிலேயே திருப்தியடைந்து திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு பேக்ரவுண்ட் செக் செய்யும் சந்தர்ப்பம் இவர்களுக்கு இல்லை. திருமணமாகி ஒரு அன்னிய நாட்டுக்குச் செல்லும் ஒரு பெண் அந்த நாட்டில் தனக்கான சட்ட உரிமைகள் என்னவென்று தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அமெரிக்கா சென்று, அங்கே கணவனிடம் கொடுமைப் பட்டு வீட்டில் இருந்து தப்பி இந்தியா திரும்பி வந்த பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அங்கேயே இருந்து அந்த கணவன் மீது புகார் கொடுத்து, தான் வாழ வந்த வீட்டில் தனக்கும் உரிமை கேட்டு, எதிர்கால பராமரிப்புக்கான பணத்தொகையையும் கணவனிடம் பெறுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும், சட்ட வசதிகளும் பெண்களுக்கு உள்ளது. படிப்பு என்பது பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுப்பதாகவும், ஆபத்தான சூழ்நிலைகளில் சமையோசிதமாக யோசித்து நடவடிக்கை எடுக்கும் பக்குவத்தை கொடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
படிக்காத பெண்கள் இது போன்ற பிரச்சினைகளை நன்றாகக் கையாள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். தன்னை அடித்தக் கணவனை திருப்பி அடித்துவிட்டு வெளியேறிய பெண்களை நான் பார்த்திருக்கிறேன். தன்னை கைவிட்டு இன்னொருத்தியைத் திருமணம் செய்துகொண்ட கணவனை, நீ வெனும்னா அவளோடு போய் இருந்துகொள். இது என் வீடு. நான் இங்கே தான் இருப்பேன் என்று தன் இருப்பை நிலை நாட்டியப் பெண்கள் இருக்கிறார்கள். படித்த பெண்களிடம் தான் நிறைய தடுமாற்றங்கள் இருக்கிறது. விவாகரத்து வழக்கு நடக்கும் போது இரண்டு ஹியரிங்களுக்கு வருவார்கள். மூன்றாவது ஹியரிங்க்கு வரமாட்டார்கள். என்னவென்று விசாரித்தால், அதற்குள் இரு குடும்பத்தாரும் சமாதானம் பேசியிருப்பார்கள். அது தவறில்லை. அந்தக் கணவர் திருந்தியிருக்கலாம். மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அந்தப் பெண்ணுக்கு அமையலாம். பெண்கள் தான் தம் வாழ்க்கையை முடிவு செய்யவேண்டும். வன்முறைகளைத் தாங்கும் வலிமை பெண்களுக்கு இருப்பதைப் போலவே அதனை எதிர்க்கும் வலிமையையும் அவர்கள் பெற வேண்டும் என்பது தான் என் ஆவல்.
கேள்வி: நீங்கள் இருக்கும் நீதித் துறையில் நீங்கள் அதிகம் எதிர்கொண்டது பாலினப் பாகுபாடா அல்லது சாதி ரீதியான பாகுபாடா?
கிருபா: இதனை பல நிலைகளில் அனுகலாம் முதலில் நீதித் துறை ஒரு ஆணாதிக்கம் உள்ள ஒரு துறை. நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அலுவலக க்ளர்க்குகள், பெஞ்ச் க்ளர்க்குகள் எல்லோருமே பெரும்பாலாக ஆண்கள் தான். உச்ச நீதி மன்றம் நிறுவப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில், வழக்குத் தொடுப்பவர்களும் பெரும்பான்மையாக ஆண்களாகவே இருக்கிறார்கள். வழக்குத் தொடுக்கும் ஆண்கள் ஒரு பெண் வழக்கறிஞரிடம் செல்வதில்லை. ஆண் வழக்கரிஞ்சர்களையே அனுகுகிறார்கள். இரண்டு ஆண்கள் சேர்ந்து ஒரு வழக்கை போடும்போது, அதற்கான தீர்ப்பையும் ஒரு ஆணிடமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பெண்கள் நீதித்துறையில் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு முத்த வழக்கறிஞரின் மனைவியாகவோ, மகளாகவோ இருப்பார்கள்.. அப்படியிருக்குபோது, அவர்களுக்கு அந்தத் துறையில் தகுந்த மரியாதை கிடைக்கிறது. அப்படி வருபவர்களில் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தீர்களென்றால், முதல் 15 வருடங்கள் வரை ஆதிக்கச் சாதியினரே நீதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் தம் இடத்தை விட்டு அகலும் போது, தம் சாதியினர், அல்லது தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அந்த இடத்தை விட்டுக்கொடுக்கின்றனர். என்னைப் போன்ற பெண்கள் வருவதில் என்ன பிரச்சினை என்று பார்ப்போம். நான் ஒரு முதல் தலைமுறை வழக்கறிஞ்சர். என்னை அந்தத் துறையில் யாருக்குமே தெரியாது. என் அப்பாவின் நண்பர்கள் யாரும் அங்கே கிடையாது. இரண்டாவது என் தோற்றம். பார்ப்பதற்கு ஒரு ஆதிக்க சாதிப் பெண்போல் வெள்ளையாக உயரமாக நான் இருந்தேனென்றால் என் தோற்றத்தின் அடிப்படையில் ஒரு மரியாதை கிடைக்கும். இங்கே அதுவும் இல்லை. மூன்றாவதாக, நான் ஒரு தென்னிந்தியப் பெண். நான் தில்லியில் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் வட இந்தியர்கள் நிறைந்த ஒரு பகுதியில் இனத்தின் அடிப்படையிலும் ஒரு பாகுபாட்டினை சந்திக்கிறேன். தமிழ் நாட்டிலிருந்து, தமிழ் பேசுகிற கறுப்பு நிறப் பெண்ணாக நான் நீடிமன்றத்தில் நிற்கும் போது, நான் பல நிலைகளில் பாகுபாட்டினை சந்திக்கிறேன்.
தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக