ஞாயிறு, 10 மார்ச், 2019

பெரிய ஊடகங்களின் மோடி ஜால்ரா

Savukku : சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த ‘தி வயர் உரையாடல்கள்‘ அமர்வில் பத்திரிகையாளர் ரவிஷ் குமார் நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்: பொதுவெளியில் எவையெல்லாம் ஏற்கத்தகாததாகவும், அறமற்றதாகவும் இருந்தனவோ, அவையெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதன்மைச் செய்தி ஊடகங்களில் முற்றிலும் ஏற்கத்தக்கதாகவும் அறமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஊடகப் போக்கு என்பது ஒழுக்கக் கேடானவற்றைக் கொண்டாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், தவறானவற்றுக்கு அதிக மதிப்பளித்து உயரிய இடத்தைத் தருவதாகவும் இருக்கிறது. அடைவேக்காட்டுத்தனமே இப்போதெல்லாம் மேன்மையானதாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் செய்தி ஊடகங்கள் மேன்மையானதாக கருதப்பட்டன. இப்போது அவை தமது ஆபாசத்தால் இந்திய ஜனநாயகத்தின் நடைமுறைகளையே அழித்துவருகின்றன.
வீதியாக இருந்தாலும் சரி, செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களாக இருந்தாலும் சரி, ஆபாசத்துடனும் வரம்புமீறலுடனும் நடந்துகொள்வது தவறே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இது, ஒரு தனிப்பட்ட சேனல் அல்லது தனியொரு செய்தி நெறியாளரின் செயலாக மட்டுமே இல்லை. மாறாக, நூற்றுக்கணக்கானோர் இதைத்தான் செய்துவருகின்றனர். வீழ்ச்சிக்குக் தலைமைதாங்கும் அவர்கள், ஊடகங்களின் தரம் தாழ்ந்துபோவதைக் கொண்டாடுகிறார்கள்.

செய்தி ஊடகங்களும் அரசியலும் முழுவீச்சில் இணைந்து செயல்படுவதே இத்தகைய மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது. இந்த நடைமுறையில், அரசியல் ஆதரவாளர்கள் மட்டுமே தங்களின் பார்வையாளராக இருக்கக்கூடும் என ஊடகங்கள் அடையாளம் காண்கின்றன. இந்தந்த ஊடகத்தின் பார்வையாளர்களும் ஆதரவாளர்களும் இந்தந்தக் கொள்கைகளையும் அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்களே எனும் நிலை உருவாகும்போது, ஊடகப் பார்வையாளர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்குமான வேறுபாடு களையப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் ஆதரவாளர்களையே பார்வையாளர்களாக உருவாக்குவதால் செய்திகளின் பன்முகத்தன்மையையே இழக்க நேரிடும். இவ்வாறாக, அவர்கள் தகவலற்ற கும்பலாகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்பதாக நினைக்கிறேன். இந்தக் காரணத்திற்காகவே நான் இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இத்தகைய முட்டாள்தனங்களைக் கேலி செய்வதைத் தவிர்க்கிறேன். கற்றலுக்கான இடத்தை அறியாமை அபகரித்துக்கொள்வதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தக் கும்பல் தகவல் போதாமையுடன் இயங்குவது நிரூபணமான விஷயம். உதாரணத்திற்கு, புல்வாமா தாக்குதல் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், பிரதமர் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று தான் விவாத எழுப்பப்பட்டிருக்க வேண்டும். மாறாக, சச்சின் டெண்டுல்கர் ஏன் இது பற்றி கருத்து கூறவில்லை என்பதாக விவாதத்தினை நடத்தி கொண்டிருந்தார்கள். தகவல் தொடர்பு ஊடகத்தின் பணி என்பது தகவலை விரிவாக்குவது என்று தவறாகக் கருதும்படி செய்துவிட்டோம் ஆனால், அது அப்படி அல்ல. ஒரு பிரச்சனைக்கு பல்வேறு கண்ணோட்டங்கள் உண்டு. அந்த கண்ணோட்டங்களை அழிப்பதென்பது தகவலற்ற நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். இதுதான் பரவலாகப் பெருகி நிற்கும் முதன்மைச் செய்தி ஊடகங்களில் நடக்கிறது.
முதன்மைச் செய்தி சேனல்கள் கடந்த ஐந்து வருடங்களாக ‘தேசிய பாடத்திட்டம்’ ஒன்றினைத் தங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறது. அதனுடைய நோக்கம் என்பது துவக்கத்திலிருந்தே படு துல்லியமாக இருந்துவந்திருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் சீரிய பார்வையாளனை,  அதாவது கேள்வி எழுப்பும் குரலை நொறுக்குதே அதன் நோக்கம். அப்போதுதான் ஜனநாயகத்தை முற்றிலும் கொன்றுவிடாமல், அதை முடக்கும் வேலைகளைச் செயல்படுத்த முடியும். வீதியில் ரத்த வெள்ளம் பாயச் செய்வதும் இந்த நடைமுறையின் ஒரு பகுதியே என்பதால், சுபத் குமர் சிங் அல்லது அக்லாக் எவராக இருந்தாலும் சரி, இந்தக் கூட்டம் யாரையும் விட்டுவிடாது. இத்தகைய தாக்கத்தையே தற்போதைய ஊடகங்களின் ‘தேசியப் பாடத்திட்டம்’ தோற்றுவித்துள்ளது. நமது ஜனநாயகத்தையும், குடிமக்கள் எனும் உணர்வையும் மூழ்கடித்த வகையில், இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றே நம்புகிறேன்.
2014ஆம் ஆண்டில் மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் முதன்மைச் செய்தி ஊடகங்கள் தங்களது தேசியப் பாடத்திட்டத்தைத் தொடங்கின. இந்து – முஸ்லிம் பிரிவினையை உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான செயல்பாடுகளே அதன் மைய நோக்கம். அதற்காக, குடிமக்களிடையே பிரிவினை உணர்வைப் பெருக்குவது அவசியமானது. இதற்காக அவர்கள் செய்தது என்னவெனில் குடியுரிமை குறித்த மக்களின் விழிப்புணர்வை இல்லாமலாக்குவதைத் தான். தகவல் அறிதலும், கேள்வி எழுப்புதலும் குடியுரிமையின் அடிப்படை சாத்தியம் என்பதால் அவற்றை நசுக்கின. நமது முதன்மைச் செய்தி ஊடகங்கள், அரசைக் கேள்வி கேட்பதில்லை; மாறாக, அரசின் சார்பில் மக்களை விசாரணைக்கு உள்ளாக்குகின்றன. புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பின்னால் இந்தச் செய்தி சேனல்களிடமிருந்து வெளிப்படும் அரசியல் நிலைப்பாடுகளே இதற்குத் தெளிவான சான்று.
குடிமக்களிடமிருந்தே எதிரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். அதற்காக, அரைவேக்காட்டுத் தகவல்களுடன் ‘இந்துக்களின் விரக்தி’ மற்றும் ‘முஸ்லிம்களின் விரக்தி’ ஆகிய உணர்வுகளுக்கு உரமூட்டி நம் அனைவரிடமும் பரப்பப்படுகிறது. இந்த விரக்தி முன்னரும் இருந்தது. ஆனால், அது இப்போது பன்மடங்கு பெருக்கப்பட்டு ஊடகங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் காரணத்தால்தான், முதன்மைச் செய்தி ஊடகங்கள் இப்போது மக்களுக்கான ஊடகங்களாக இல்லாமல் இந்துக்களுக்கான ஊடகங்களாகச் செயல்படுகின்றன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இந்துத்துவத்தைப் பரப்புவதற்காக இந்து மதத்தின் பெயரால் அரசியல் செய்வோருக்காக ஊடகங்கள் பேசுகின்றன. முதன்மைச் செய்தி ஊடகங்களில் 90 சதவீதத்தை இந்துத்துவ ஊடகங்களே ஆக்கிரமிக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யாருமே நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆயினும், அதுதான் நடந்தேறியது.
இந்துத்துவா போர்வையில் இயங்கும் முதன்மைச் செய்தி ஊடகங்கள் நிச்சயமாக இப்பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போவதில்லை. மாறாக, அவர்களுடன் கைகோர்த்து அதே தூண்டுதல் வேலைகளைத்தான் செய்கின்றன.
குடிமக்கள் முன்னர் தங்களை இந்துக்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்று சொல்லவரவில்லை. ஆனால், அந்தப் புரிதலை மாற்றி, இந்துவாக இருப்பதன் புதிய கோணத்தை உருவாக்கியதையே சொல்கிறேன். அதாவது, உத்வேகம் குலைக்கப்பட்ட ஒருவர் தன்பக்கம் நிற்கும் மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடும் அவல நிலை. ஒருவர் தன் அருகில் இருப்பவரைச் சந்தேகித்து, அவர் ஓர் இந்து என்றாலும் இந்து விரோதியாகப் பார்க்கும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தினால் குத்தப்படும் முத்திரையே ‘தேச விரோதி’.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர், மற்ற இந்துக்களை அச்சத்துடன் அணுகுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்த நிலை ஏற்படச் சமகால முதன்மைச் செய்தி ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியக் காரணம். இவற்றின் நடத்தை முற்றிலும் இந்துப் பாரம்பரியங்களுக்கு எதிரானது. ‘வேறுபாடு அறியும் திறன்களைக் கோபம் அழித்துவிடும்’ என்று பகவத் கீதை சொல்கிறது. ஆனால், நமது செய்தி நெறியாளரோ மூர்க்கத்துடனும் ஆவேசத்துடனும் கூடிய கோபமாக மட்டுமே பேசுகிறார்.
முதன்மைச் செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் புதுவிதமான போலி பக்தர்களை உருவாக்கி வைத்துள்ளன. அல்லது, இந்த ரக பக்தர்கள்தான் இப்போதைய ஊடகங்களை உருவாக்கத் துணை புரிந்திருக்கக்கூடும். ஒவ்வொரு குடிமகனும் கபீராகவோ அல்லது ரவிதாஸாகவோ ஆக வேண்டும். அப்போதுதான் மதம் அல்லது அரசின் அன்றாட நடைமுறைகளை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். குரு ரவிதாஸின் உதாரணம் இல்லாமல், மனத்தின் புனிதத்தன்மை குறித்தெல்லாம் நாம் புரிந்துகொள்ள முடியாது. கங்கையில் மூழ்கி எழுவதனதால் மட்டுமே ஒருவரின் மத நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்கிற தோற்றம் உருவாகியுள்ளது. அதுபோலவே, சச்சின் டெண்டுல்கர் தனது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்றால் சில செய்தி சேனல்களுக்குச் செல்ல வேண்டும். இன்றைய முதன்மைச் செய்தி ஊடகங்கள் அனைத்து இந்தியப் பாரம்பரியங்களுக்கும் எதிராகவே உள்ளன. அவை, தகவல்கள் பறிக்கப்பட்ட பக்தர்களை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்துகின்றன. தகவலற்ற ஒருவர் அன்பில்லாதவரும் ஆவர்.
இதுதான் இப்போது நமது ஜனநாயக முறையின் அடித்தளம். அடிப்படையே மாறிவிட்டதால், அவற்றின் நெறிமுறைகளும் மாறிவிட்டன. நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள் எனில், காங்கிரஸ் ஏஜென்ட், நக்சல், அர்பன் நக்சல், இந்து ஒற்றுமைக்கு எதிரானவர், முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்’ என்பதில் தொடங்கி கடைசியில் மோடி எதிர்ப்பாளர் என்கிற ரீதியில் உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும். யதார்த்தத்தில், நீங்கள் ஏன் மோடியை எதிர்க்கிறீர்கள் என்று கடைசியாகக் கேட்கப்படும் கேள்விதான் நமது ஜனநாயக முறையின் முடிவுக்கான துவக்கப் புள்ளியாக இருக்கும்.
‘இந்து விரக்தி’ உணர்வைப் போலியாக உருவாக்க, முஸ்லிம்கள் மீது பயம் ஏற்படுத்தும் வேலையை ஊடகங்கள் செய்தன. உண்மையில், இதை மையமாக வைத்து இந்துக்களிடம் கோபத்தை உண்டாகும் வகையில் ஒட்டுமொத்தத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இந்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது போலவே அதே தாக்கத்தை ஏற்படுத்த முஸ்லிம்கள் மீதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்துக்கள் அரசைக் கேள்வி கேட்பதை நிறுத்தினர். முஸ்லிம்களும் அச்சத்தின் காரணமாக அரசைக் கேள்வி கேட்பதை நிறுத்தினர். உண்மையில், முஸ்லிம்கள் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர்கள் தங்களது அரசியல் பிரதிநிதித்துவ உரிமையில் இருந்தும் விடுவித்துக்கொண்டனர். பொது மற்றும் அரசியில் வெளியில் இருந்து அவர்கள் தங்களை விலக்கிக்கொண்டனர். இந்த அச்சுறுத்தல் உருவாக்கப்பட்டதன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்டன. அவர்கள் தோல்வி பயம் காரணமாக, இந்த விவகாரங்களில் கேள்வி எழுப்புவதிலிருந்து விலக்கிக்கொண்டனர்.
என் முன்னால் ஒரு கோழைத்தனமான இந்தியாவைப் பார்க்கிறேன். அங்கு எல்லாருமே தங்களது அச்சங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். நாம் குடிமக்கள் என்ற உணர்வை மீட்க வேண்டியது கட்டாயம். இல்லையேல், நூற்றாண்டு கால போராட்டத்திற்குப் பின் எட்டப்பட்ட இந்தியாவை நாம் இழந்து நிற்க வேண்டியிருக்கும். இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் அச்சத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதற்காக, முதன்மைச் செய்தி ஊடகங்களிடமிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளின் உரைகள், செய்தி நெறியாளரின் ஆவேசம், தொலைக்காட்சித் திரையில் ஓடும் ஸ்லோகன்கள், வாட்ஸப் தகவல்களின் மொழி முதலானவற்றை ஒருவர் ஆய்வு செய்ய நேர்ந்தால், ஒருவிதமான மனநல பாதிப்பு வருவது நிச்சயம். இத்தகைய மொழியைப் பிரதிபலிக்காத பட்சத்தில் டெண்டுல்கர் தேச விரோதியாகவே கருதப்படுவார்; லெஃப்டினன் ஜெனரல் சையத் அடா ஹஸ்னைனும் அப்படியே நடத்தப்படுவார். இன்றைய முதன்மைச் செய்தி ஊடகங்கள் தங்களது முட்டாள்தனத்தையும், ஆபாசத்தையும், வரம்புமீறலையும் கொண்டு செயல்படுவது, தொழில் ரீதியில் நல்ல வருமானம் ஈட்டக் கூடிய முன்மாதிரியாக மட்டுமே இருக்கக்கூடும்.
இந்த நடைமுறை எதிர்க்கப்படாமல் இல்லை. யூடியூப் மூலம் பொதுமக்கள் சார்பில் அரசிடம் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ‘தி வயர்’, ‘ஸ்க்ரால்’, ‘தி கேரவன்’ முதலான புது விதமான ஊடகங்கள் உருவெடுத்துள்ளன. ‘தி டெலகிராப்’ போன்ற நாளிதழ்களும் உள்ளன. நாமும் முயற்சிகளை மேற்கொண்டுதான்வருகிறோம். ஊடகங்கள் குறித்த நல்ல புரிதல் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த அமைப்பில் போராடும் துணிச்சலான பெண் பத்திரிகையாளர்களும் நம்பிக்கையை அளிக்கின்றனர். இந்த முயற்சிகள் அனைத்துமே அளவில் போதுமானவை அல்ல. ஆனால், இது மென்மேலும் உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
முதன்மைச் செய்தி ஊடகங்கள் இனி ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இல்லாமல், ஓர் அரசியல் கட்சியின் முதல் தூணாகவே இருக்கும் என்றுதான் இப்போதைக்குச் சொல்ல முடியும். இந்தியாவில் இப்படி ஒரு முதுகெலும்பில்லாத முதன்மைச் செய்தி ஊடகங்களை உருவாக்கிய வகையில் பாஜகவுக்கும் மோடிஜிக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். உண்மையில், மோடி அவர்களே, உங்களிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்: நீங்கள் எங்கிருந்து ஒரு துறவி மனநிலையைப் பெற்றீர்கள்?
செய்தி சேனல்கள் 24 மணி நேரமும் பிரதமரையே துதிபாடிக் கொண்டிருக்கின்றன. அங்கு தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் பிரதமரின் மனநிலையைக் கண்டு வியக்கிறேன். ஆனால், அவர்தான் துறவி ஆயிற்றே. ஒரு துறவி இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு தன்னைத் தானே ஏன் வருத்திக் கொள்ள வேண்டும்?
 ரவிஷ் குமார்
நன்றி: தி வயர்
(ரவிஷ்குமார் என்டிடிவி யின் நெறியாளர்)
https://thewire.in/media/today-freedom-from-fear-is-freedom-from-mainstream-media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக