திங்கள், 18 மார்ச், 2019

சிறை செல்லாமல் தப்பிய அம்பானி

சிறை செல்லாமல் தப்பிய அம்பானிமின்னம்பலம் : சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அனில் அம்பானி செலுத்தியதால் 3 மாத சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தனக்குச் செலுத்தவேண்டிய ரூ.468 கோடி நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று கடந்த ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், சோனி எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரை இந்தியாவை விட்டு அனில் அம்பானியும், உயரதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடைவிதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் அனில் அம்பானியின் குற்றத்தை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அனில் அம்பானி உரிய காலத்துக்குள் நிலுவைத்தொகையை செலுத்தாத காரணத்தால், சோனி எரிக்சன் நிறுவனம் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சோனி எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.468 கோடி நிலுவைத் தொகையை மார்ச் 19ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று அனில் அம்பானிக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி, நிலுவைத் தொகையை செலுத்தாததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.
நீதிமன்றம் அளித்த கால அவகாசம் நாளையோடு முடியும் நிலையில், இன்று சோனி எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அனில் அம்பானி செலுத்தியுள்ளார். இந்நிறுவனங்களுக்கு இடையில் நீண்டகாலமாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இதனால் 3 மாத சிறை தண்டனையிலிருந்து அனில் அம்பானி தப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக