சனி, 9 மார்ச், 2019

மீண்டும் பிரேமலதா அதிமுகவுக்கு தூது!. தினகரன் கைவிரிப்பு;..

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:  தினகரன் கைவிரிப்பு; மீண்டும் பிரேமலதா அதிமுகவுக்கு  தூது!“தேமுதிக விஷயத்தில் எடப்பாடி தொடர்ந்து பிடி கொடுக்காமலேயே இருக்கிறார். திமுக, அதிமுக இரண்டும் கழுத்தறுத்துவிட்டது என்ற நிலையில் தேமுதிக மாநிலச் செயலாளர் சுதீஷ் அமமுக தரப்பில் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வனிடம் பேசியதையும், அதற்கு தினகரன், ‘சரி பேசுவோம்’ என்று பதில் அளித்திருந்ததையும் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் தெரிவித்திருந்தேன். நேற்று இரவே தினகரன் தனது பதிலை தேமுதிகவுக்குத் தெரிவித்துவிட்டாராம்.
‘எங்களோட தனிப்பட்ட பலம் என்னங்குறதை தெரிஞ்சுக்கறதுக்காகவே தனியா போட்டியிடலாம்னு இருக்கோம். அதனால கூட்டணி பத்தி நாங்க நினைக்கவே இல்லை’ என்று தினகரன் தரப்பில் இருந்து சுதீஷிடம் சொல்லிவிட்டார்களாம். அதனால், தேமுதிக இப்போது வேறு வழியின்றி அதிமுகவிடமே திரும்பியிருக்கிறது.

நேற்று இரவு தம்பிதுரையுடன் பேசியிருக்கிறார் பிரேமலதா. தம்பிதுரையோ, ‘கூட்டணியில் நீங்க இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். கரூர் தொகுதியில் நான் நிற்கிறேன். அங்கே தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் இருப்பது எனக்கு தெரியும். அதனால் நீங்கள் கூட்டணிக்குள் வருவதில் என் சுயநலமும் இருக்கு. முன்னாடியே வாங்கியிருந்தா 5க்கும் குறையில்லாமல் வாங்கி இருக்கலாம். இப்போ எல்லாம் சிக்கலாகிடுச்சு. இங்கே பிஜேபியில் இருந்து பேசினாலும், எடப்பாடி 2க்கும் மேல ஏறி வர மாட்டேங்குறாரு. 2 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபாவுமாவது கொடுங்க என நான் பேசிப் பார்க்கிறேன்’ என அவர் சொல்லியிருக்கிறார்.
அதற்கு பிரேமலதாவோ, ‘அதெல்லாம் வேண்டாம். எத்தனை கொடுக்கிறதாக இருந்தாலும் எங்களுக்கு நாடாளுமன்றத்திலேயே கொடுக்க சொல்லுங்க. ராஜ்யசபா சீட் கொடுக்கிறேன்னு இப்போ சொல்லிட்டு நாளைக்கு எப்படி மாறுவாங்கன்னு சொல்ல முடியாது. தேர்தல் முடிஞ்சதும் எங்களை கழட்டிவிட்டுட்டா என்ன பண்றது’ என்று எச்சரிக்கையாக கேட்டிருக்கிறார். அத்துடன், எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் சேர்த்து வைக்கும்படியும் தம்பிதுரையுடன் பேசியிருக்கிறார்.
அதனுடைய வெளிப்பாடுதான் இன்று முதல்வர், துணை முதல்வர் என இருவரிடமும் தனித்தனியாக பேசியிருக்கிறார் தம்பிதுரை. ‘எந்த தொகுதி கொடுத்தாலும் சரி என்ற மனநிலைக்கு தேமுதிக வந்துட்டாங்க. 2 சீட் என்பது மிகவும் குறைவு என நினைக்கிறாங்க. ராஜ்யசபா சீட்டுக்கு பதிலாக ஒரு சீட் சேர்த்துக் கொடுத்தால் வந்துடுவாங்க. அவங்களை இழுத்துப் போட்டால் நமக்குதான் நல்லது. கரூர், மதுரை, திருப்பூர் பகுதிகளில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கு..’ என்று சொன்னாராம் தம்பிதுரை. அதற்கு எடப்பாடி, ‘ 3 எதுக்கு 2 கொடுத்தாலே அவங்க வந்துடுவாங்க. நீங்க பொறுமையாக இருங்க எல்லாம் நடக்கும்’ என்று சிரித்தபடியே கமெண்ட் அடித்திருக்கிறார்.
பன்னீரோ, ‘நீங்க சொல்ற வாக்கு வங்கி என்பது அந்தக் கட்சிக்கானது இல்லை. விஜயகாந்துக்கானது. அவர் சொல்றதை கேட்கும் நிலையில் அங்கே யாரும் இல்லை. அவரும் வந்து பேசும் நிலையில் இல்லை. அப்புறம் எப்படி அதை தேமுதிக வாக்கு வங்கி என சொல்ல முடியும். கிராமத்துப் பக்கத்தில் இருக்கிறவங்களுக்கு இன்னும் கூட அந்த கட்சி பேரு தெரியாது. விஜயகாந்த் கட்சின்னுதான் சொல்லுவாங்க. பிரேமலதாவுக்காக எல்லாம் யாரும் ஓட்டுப் போட மாட்டாங்க...’ என அவரும் விருப்பம் இல்லாமலேயே பேசியிருக்கிறார்.
இந்த தகவல்கள் எல்லாம் தம்பிதுரை மூலமாக மறுபடியும் பிரேமலதா காதுக்குப் போயிருக்கிறது. ஏற்கனவே டென்ஷனில் இருந்தவர் இன்னும் டென்ஷன் ஆகிவிட்டாராம். தமிழிசையைத் தொடர்பு கொண்டு இன்று பிரேமலதாவே பேசி இருக்கிறார். ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. டெல்லியில் பேசி, இன்னொரு சிட்டிங் நீங்க உட்கார்ந்து பேச நான் ஏற்பாடு பண்றேன்’ என அவர் உறுதிக் கொடுத்திருக்கிறார். அதிமுக- பிஜேபி பேச்சுவார்த்தை முடிந்த அதே ஹோட்டலில் மீண்டும் தேமுதிகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை இருக்கும் என்கிறார்கள் பிஜேபி வட்டாரத்தில். ஆக, இன்றைய மாலை நிலவரப்படி தேமுதிகவுக்கு 3 சீட்டுகள் என்ற நிலைமையே இருக்கிறது ” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக