புதன், 20 மார்ச், 2019

அந்தக் காற்றை சுவாசிக்க ஓர் உயிர்கூட மிச்சமிருக்காது!


அந்தக் காற்றை சுவாசிக்க ஓர் உயிர்கூட மிச்சமிருக்காது!
மின்னம்பலம் : கதவைத் தட்டும் பேரழிவு - நரேஷ் கடல் உயிரினங்களில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகியிருக்கிறது, மனிதர்களால் வெளியான கார்பன் - டை- ஆக்ஸைட் வாயு. நான்கில் ஒரு பங்கு என்பது எவ்வளவு பெரிய அழிவு என்பதைப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. இந்தியாவில் வாழும் மக்கள் ஒருவர்கூட மிச்சமில்லாமல் இறந்துவிட்டால், அது எவ்வளவு பெரிய அழிவோ அப்படிப்பட்டது மேற்குறிப்பிட்ட கடல் உயிரின அழிவு.
கடலில் உள்ள அமிலத்தன்மையின் அளவைக் (pH value) கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது கடல் படிமங்களில் உள்ள கால்சியம் கார்பனேட் (Calcium Carbonate). கடலில் உயிரினங்கள் உருவாக ஆரம்பித்த காலத்திலிருந்து தன் கடமையைக் கண்ணிமைக்காமல் செய்துவந்தது கால்சியம் கார்பனேட். அதிகமான கரியமில வாயுவை உள்வாங்கி கடலில் அமிலத்தன்மை அதிகமாகாமல் பாதுகாத்துவந்த இந்தக் காவலர்கள் தற்போது சாம்பலாகி வருகின்றனர். அறிவியல்பூர்வமாகச் சொல்ல வேண்டுமானால், கால்சியம் கார்பனேட் படிமங்கள் அதிகப்படியான அமில வாயுக்களுடன் வினைப்புரிந்து கரைந்துவிடுகின்றன (dissolution of calcium carbonate sediments).


உலகில் வாழும் நிலம் சார்ந்த உயிர்களுக்கான காற்றை வழங்குவது மரங்கள் மட்டுமல்ல... கடலும்தான். இன்னும் சொல்லப்போனால் காடுகளிலிருந்து வெளிவரும் உயிர் காற்றின் அளவைவிட, கடலிலிருந்து வெளிவரும் உயிர் காற்றின் அளவு அதிகம். நிலத்தைவிட மிக அதிகமாக இருக்கும் கடலின் பரப்பளவு, இந்த ஆற்றல் வெளியீட்டைச் சாத்தியப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, மரங்கள் எப்படி கரியமில வாயுவை உள்வாங்கி உயிர் காற்றை வெளியிடுகின்றனவோ அதேபோல கடலும் கரியமில வாயுவை உள்வாங்குகிறது. உயிர் காற்றையும், ஈரப்பதத்தையும் வெளியிடுகிறது. கடல் என்பது உலகின் மிகப்பெரிய காடு. மனிதர்களுக்குக் கடல் பற்றி தெரிந்ததெல்லாம் வெறும் துளியளவு. தெரியாதவை கடலளவு. தெரியவேயில்லை என்பதால், நம்மால் புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. இன்னும் உலகின் மனிதர்களின் காலடி படாத காடுகள் மூன்று சதவிகிதம் இருக்கின்றன. இன்னும் உலகின் மனிதர்களுக்குத் தெரியாத உயிரினங்கள் நிலத்தில் வாழ்ந்துவருகின்றன.
கடலின் நிலம் அது!
நிலத்திலேயே இந்த நிலைமைதான் என்றால், மனிதர்களின் கடல் அறிவைப் பற்றி சொல்லவா வேண்டும்? டேவிட் அட்டன்பரோ இப்படிக் கூறினார், “மனிதர்களால் ஒருபோதும் கடலின் ஆழத்தைக் காணமுடியாது!” என்று. அவர் ஆழம் என்று அளவை குறிப்பிடவில்லை, அதன் அறிவைக் குறிப்பிட்டார். மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு மிக அதிகமானதால், கடல் அவ்வாயுவினை மிக அதிகமாக உள்வாங்க வேண்டியதாகிவிட்டது. அப்படி கடலும் காடும் கரியமில வாயுவை உள்வாங்கவில்லை என்றால், மனித இனம் 10 வருடங்களுக்கு முன்பே முழுமையாக அழிந்திருக்கும். அதீத கரியமில வாயு கடலின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்தது. அமிலத்தன்மையைச் சீர்செய்ய கால்சைட் (Calcite) அதிகமாகக் கரைந்தது. அதனால் கடலின் வளமான நிலம் அழிந்து வருகிறது. கடலின் நிலத்தில் இருக்கும் தனிமங்கள் அமிலத்தன்மையால் அதிவேகமாக அழிந்துவருகின்றன.

கடல் தரைப்பகுதியின் மேற்பரப்பு கால்சைட் (Calcium carbonite or calcite) தனிமத்தால் மூடப்பட்டிருக்கும். அவைதான் கடல் அமில உறிஞ்சிகள். அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தும் இந்தத் தனிமங்கள் அழிந்துவருவதால், அமிலத்தன்மை மேலும் அதிகமாகி வருகிறது. இதனால்தான் கடலின் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்தன. மனிதர்களின் உடல் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடுவதில்லை. இப்போது இருக்கும் மக்கள்தொகையைப் போல இரண்டு மடங்கு மக்கள்தொகை அதிகரித்தாலும் கரியமில வாயுவின் அளவு இப்போதிருப்பதைப் போல அதிகரித்திருக்காது. இயற்கை அவ்வளவு இயல்பானது.
ஆனால், இப்போதிருக்கும் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினரின் அதீத பொருளாதார வெறியும், அந்த நான்கில் ஒரு பகுதியினருக்காக வேலை செய்யும் மீதம் உள்ள மனிதர்களின் நுகர்வும் நடத்திய வெறியாட்டம் இது. கடந்த 50 வருடங்களில் மனிதர்கள் வெளியிட்ட கரியமில வாயுவின் அளவானது, வடமேற்கு அட்லாண்டிக் பகுதியில் இருக்கும் கடல் நிலத்தில் உள்ள கால்சைட்டில் 100 சதவிகிதத்தை அழித்திருக்கிறது. பிற பகுதிகளில் 40 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகித தரைப்பகுதி அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த அதீத அமிலத்தன்மையில் உயிர்வாழ முடியாமல் அவ்வுயிர்கள் மடிந்து போகின்றன. இந்த நிலை நீடித்தால் கடல் முழு அமிலமாக மாறும். அதன்பிறகு கடலால் கரியமில வாயுவை உள்வாங்க முடியாது.
கடல் உள்வாங்காத கரியமில வாயு, நிலத்தில் வீசும் காற்றில்தான் கலக்கும். அப்போது நம் காற்று அமிலமாகும்.
அதைச் சுவாசிக்க ஓர் உயிர்கூட மிச்சமிருக்காது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக