புதன், 6 மார்ச், 2019

மோடி :திமுக ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி

மாலைமலர் : காஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கருணாநிதியின் ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என குற்றம்சாட்டினார். சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டு வந்தது. சவுதி இளவரசரிடம் பேசி அங்குள்ள தமிழர்களை
விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாகிஸ்தானிடம் சிக்கிய தமிழக விங் கமாண்டர் அபிநந்தன் இரண்டு நாட்களிலேயே எப்படி மீட்கப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மத்திய அரசு ஓடோடி செல்கிறது.
இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.

காங்கிரஸ் வலிமை மிக்க மாநில தலைவர்களை அவமானப்படுத்துகிறது. காங்கிரசால் காமாராஜர் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை தமிழகம் மறக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அரசை கலைத்தது காங்கிரஸ் கட்சிதான். அரசியலுக்காக மாநில அரசை கலைத்ததும் காங்கிரஸ்.

ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், மூச்சையும் 130 கோடி மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். ஊழல்களை களைவதில் எந்த சமரசமும் கிடையாது.

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியிடம் அவர்களது தலைமை யார்? அவர்களது நோக்கம் என்ன? திட்டம் என்ன? என்பதை மக்கள் கேட்க வேண்டும்.

உங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். நாளை நமதே... நாற்பதும் நமதே என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக