புதன், 13 மார்ச், 2019

ராகுலை சந்திக்க ஸ்டாலின் மறுப்பு? காங்கிரஸ் கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி.... .தினமலர்

ராகுல்,சந்திக்க,ஸ்டாலின்,மறுப்பு?,காங்கிரஸ் கோஷ்டிகள்,கடும் அதிர்ச்சிசில தொகுதிகளை, தங்களுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, தி.மு.க.,விடம், காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், அதிருப்தி அடைந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று சென்னை வரும், காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் உட்பட, ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து, தி.மு.க., குழுவிடம், காங்கிரஸ் குழு பேச்சு நடத்தி வருகிறது. தாங்கள் விரும்பும், 15 தொகுதிகள் பட்டியலை அளித்து, அதிலிருந்து, ஒன்பதை ஒதுக்கும்படி, காங்கிரஸ் கேட்டுள்ளது. அந்த ஒன்பதில், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள, ஈரோடு, திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆரணி, அரக்கோணம் உள்ளிட்ட, சில தொகுதிகள் இடம் பெறவில்லை. பத்தாவது தொகுதியாக, சிவகங்கை இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலை தயாரித்தது, காங்கிரஸ் கட்சியின், தேசிய அமைப்பு செயலர் வேணுகோபால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த, முன்னாள், எம்.பி., ஒருவரும் என்பதால், அவர்கள் இருவர் மீதும், கோஷ்டி தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


ஈரோடு தொகுதியை, இளங்கோவனும், திருநெல்வேலி தொகுதியை, பீட்டர் அல்போன்சும், காஞ்சிபுரம் தொகுதியை விஸ்வநாதனும், அரக்கோணம் தொகுதியை, நாசே ராமச்சந்திரனும் கேட்டுள்ளனர். இதில், திருநெல்வேலி, ஈரோடு ஆகிய, இரு தொகுதிகளும், காங்கிரஸ் விருப்ப பட்டியலில் இல்லை என்பதால், அத்தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முன்வரவில்லை. காஞ்சிபுரம் தொகுதியை, தி.மு.க., விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதற்கு பதில், திருவள்ளூர் தொகுதியை எடுத்துக் கொள்ளும்படி, தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

போர்க்கொடி:

காஞ்சிபுரம் தொகுதி கிடைக்கவில்லை என்றால், கட்சி பதவியை, ராஜினாமா செய்வேன் என, காங்கிரஸ், 'மாஜி' பெண் எம்.எல்.ஏ., ஒருவர், போர்க்கொடி துாக்கி உள்ளார். கரூர் தொகுதியை, ஜோதிமணிக்கும், கிருஷ்ணகிரி தொகுதியை, இளங்கோவனுக்கும், திண்டுக்கல் தொகுதியை, செல்லக்குமாருக்கும், திருநெல்வேலி தொகுதியை, பீட்டர் அல்போன்சுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ராகுல் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், கரூர் தொகுதியை மட்டும், தி.மு.க., ஒதுக்க விரும்பவில்லை என, கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம், 12:00 மணிக்கு, கிண்டி, ராயல் மெரிடியன் ஓட்டலில், பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதில், ஸ்டாலினும் பங்கேற்க வேண்டும் என, அவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஓட்டலில், ராகுலை சந்திக்க, ஸ்டாலின் விரும்பவில்லை.அங்கு, ராகுலை சந்திக்க நேர்ந்தால், தி.மு.க., வெற்றி பெறும் தொகுதிகளை, காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க சொல்லி, ராகுல் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதை தவிர்க்க, மாலையில், கன்னியாகுமரியில், ராகுல் பேசும் பொதுக்கூட்டத்திற்கு வருவதாக, ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினின், இந்த முடிவால், காங்., கோஷ்டி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
காங்கிரஸ் எதிர்பார்ப்பு: தி.மு.க.,வினர் எதிர்ப்பு!
அரக்கோணம் தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் போட்டியிட வேண்டும் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர்; நேர்காணலிலும் அவர் பங்கேற்றார். இதனால், அந்த லோக்சபா தொகுதியில் அடங்கிய, ஆறு சட்டசபை தொகுதியில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து, பிரசாரத்திற்கு தயாராகி உள்ளனர்.இந்நிலையில், அரக்கோணம் தொகுதியில், காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார் என, நேற்று தகவல் வெளியானது. இதனால், அதிருப்தி அடைந்த, தி.மு.க.,வினர், 600க்கும் மேற்பட்டோர், 'அரக்கோணம் தொகுதியில், ஜெகத்ரட்சகன் தான் போட்டியிட வேண்டும்' என, அறிவாலயத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக