சனி, 30 மார்ச், 2019

சுப்பர் டீலக்ஸ் .. திருநங்கையரை நோகடித்து விட்டது! சமுக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம்

priya babuநக்கீரன் : எட்டு ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார். மேலும் சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அதில் ஒன்றாக திருநங்கையான பிரியா பாபு என்கிற சமூக செயற்பாட்டாளர் தனது ஃபேஸ்புக்கில் இந்த படம் குறித்து எழுதியது.
“எனக்கான கோபம்... அதிர்ச்சி... நேற்று தியேட்டரில் நானும் , சோலுவும் கூனிகுறுகிப் போனோம். திரு. விஜய்சேதுபதி அவர்கள் புடவை கட்டிக்கொண்டால் மட்டுமே திருநங்கையர் ஆகி விட மாட்டார். நீங்கள் அவர் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பது முக்கியம்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா... தயவு செய்து திருநங்கையரை குறித்து புரிந்து கொண்டு படம் எடுங்கள். தமிழ் திரை உலகம் இன்னும் திருநங்கையரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்கள் படம் உணர்த்துகிறது.

பொதுச் சமூகத்தில் பெரும்பான்மை அணியும் முகமூடிகளை அணிந்து திரியாமல் தன் உணர்விற்கு மதிப்பளித்து மிக நேர்மையாக தன் முடிவில் உறுதியாய் நின்று பெண்ணாகிப் போறவள் திருநங்கை.

ஒரு பெண்ணை தன் சகோதரியாக மட்டுமே பார்ப்பவள். ஆனால் இதில் மாணிக்கம்(சில்பா) திருமணமாகி , குடும்பம் நடத்தி , குழந்தை.... சே... உங்கள் சினிமா வெற்றிக்கு , கைதட்டலுக்கு வழக்கம் போலவே எங்களை பலிகடா ஆக்கி விட்டீர்களே..?.
தியாகராஜன் குமாரராஜா இப்போது தான் சமூகம் கொஞ்சம் திருநங்கையரை புரிந்து கொள்ள துவங்கியிருக்கு. அதற்கும் மண்.... இது பெரிய வார்த்தை தான் ஆனால் எங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்த என்று தெரியல” என்று பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக