வெள்ளி, 1 மார்ச், 2019

தாயகம் திரும்பிய அபிநந்தன்: மகிழ்ச்சியில் இந்தியா!

தாயகம் திரும்பிய அபிநந்தன்: மகிழ்ச்சியில் இந்தியா!மின்னம்பலம் : அபிநந்தன் இந்தியா திரும்பியுள்ளதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விங் கமாண்டரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரிக்கைகள் வலுத்ததையடுத்து, அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 28ஆம் தேதி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 1) பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார். மதியம் 1 மணியளவில் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு வந்தடைந்தார். பின்னர் லாகூரிலிருந்து ஜாமர் கருவி பொருத்திய காரில் அட்டாரி வாகா எல்லைக்கு வந்துள்ளார். அவருடைய வாகனத்தின் முன்னும் பின்னும், பாகிஸ்தான் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன.


இதற்கிடையே, இந்திய விமானப்படை அதிகாரிகள், அபிநந்தனின் பெற்றோர், பொதுமக்கள் என பலரும் அட்டாரி வாகா எல்லையில் குவிந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அதுபோன்று இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் விமானப் படை தரப்பிலிருந்து, அபிநந்தனை வரவேற்பதற்காக அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 3.30 மணியளவில் அபிநந்தனின் வாகனம் வாகா எல்லைக்கு வந்தடைந்தாக டான் ஊடகம் செய்தி வெளியிட்டது.

தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் வைத்து அவருக்குப் பாகிஸ்தான் மருத்துவக் குழு மருத்துவ பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனைக்குப் பிறகு, அவர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் 5.20 மணியளவில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தரப்பில் எடுக்கப்பட்ட மருத்துவ சோதனை தொடர்பான ஆவணங்களும் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்தியத் தரப்பிலிருந்தும் அவருக்குப் பரிசோதனை நடத்தப்படுகிறது. பின்னர், எல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்துச் செல்லப்படும் அபிநந்தனை, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
டெல்லியில் வைத்து, பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய முறை, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளிட்டவை குறித்து அபிநந்தனிடம் விசாரிக்கப்படவுள்ளதாகவும் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிந்திருந்த மக்கள் மேள தாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது. #welcomebackabhinandhan என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது. அவரது வருகை இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிநந்தன் விடுவிக்கப்பட்டு இந்தியா வந்துள்ள நிலையில் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானுக்கு எதிராகக் குற்றம் புரிந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக