செவ்வாய், 12 மார்ச், 2019

மத்திய அரசுப் பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழர்கள்!

மத்திய அரசு பணித் தேர்வுகள்
vikatan.com - விஷ்ணுராஜ் சௌ: >ம
த்திய அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை
குறைந்துகொண்டே வருகிறது. சமீபத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 1,765
பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் வட மாநிலங்களைச் சேர்ந்த 1,600 பேர் தேர்ச்சியடைந்தனர். இதே நிலைதான் வருமான வரித்துறை உள்ளிட்ட இதர மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான
பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளிலும் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி குறைந்த அளவே இருக்கக் காரணம் என்ன?”

மத்திய அரசுப் பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழர்கள்!“தமிழகத்தில் உள்ள  மத்திய அரசு நிறுவனங்கள், உதாரணத்திற்கு, வருமான வரித்துறை, கலால் துறை, பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற 55 மத்திய அரசு அலுவலகங்களில் குரூப் சி பிரிவுக்கான பணியாளர்கள், மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி. (Staff Selction Commission) மூலமாகவே தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பணிகளுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, கடந்த 1996-ம் ஆண்டுவரை, அந்தந்த மண்டல அளவில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அடங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற மண்டல அளவிலான தேர்வு முறைக்கு எதிராகக் குஜராத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழக்கு தொடுத்தார். அதில், இந்தியா முழுமைக்கும் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஒரே தரவரிசை அளிக்கும் சிஸ்டத்தைப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 1996-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் எந்த மத்திய அரசுப் பணிக்கும் ஆட்களை எடுக்கவில்லை. 2006-க்குப் பிறகு நடத்தப்பட்ட மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகள் அனைத்தும் ஒரே ரேங்க் சிஸ்டம் என்ற நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் அந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் அந்தத் தேர்வுகளில் பெரிய அளவில் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது”.
எம்.எஸ்.வெங்கடேசன்
“வருமான வரித்துறையிலும் இதே பிரச்னைதான் நீடிக்கின்றதா?”
“வருமான வரித்துறையில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகித ஊழியர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை 10 சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் வருமான வரித்துறையில் பணியமர்த்தப்பட்ட 100 ஆய்வாளர்களில் 99 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 265 வருமான வரி உதவியாளர்களில் 5 பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. வடமாநிலங்களிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களில் பலரும் தமிழகத்திற்கு வந்து பணியில் சேருவதில்லை.
இதனால் இங்குள்ள காலியிடங்கள் அப்படியே நீடிக்கும் நிலை உள்ளது. குரூப் சி பணியிடங்களில் பாதிக்குப் பாதி பேர், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதே நிலைதான் எல்லா மத்திய அரசுத் துறைகளிலும் நீடிக்கின்றது”.

“வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?”
“வருமான வரித்துறை போன்ற துறைகளில் அடிப்படைத் தொழில்களுக்கு மொழி மிகவும் அவசியமான ஒன்றாகும். வடமாநிலத்திலிருந்து தமிழகத்தில் வேலைக்கு வருபவர்களுக்கு மொழி தெரியாத நிலை உள்ளதால், பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் நிலை உருவாகிறது. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது, இங்கிருப்பவர்கள்  வட மாநிலம் செல்லக்கூடாது என்ற எண்ணம் எல்லாம் நமக்குக் கிடையாது. ஆனால், இந்த நடைமுறை ஒரு சமத்துவமற்ற சூழலை உருவாக்கி உள்ளது என்பதுதான் பிரச்னை. பீகாரிலிருந்து இங்குவந்து வேலை செய்யலாம். ஆனால், இங்குள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”.
எம்.எஸ்.வெங்கடேசன்
“தேர்வு முறைகளிலேயே முறைகேடுகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறதே?”
“தேர்வு முறைகளில் முறைகேடுகள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. பாட்னாவில் ஒரே தெருவிலிருந்து 15 பேர் தேர்வாகும் போதுதான் முறைகேடுகள் பற்றிய சந்தேகம் வலுக்கிறது. அதேபோல் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறார். சமீபத்தில் நடந்த ரயில்வே பணிகளுக்கான தேர்விலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவரே தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர். இவையெல்லாம் எப்படிச் சாத்தியம் எனத் தெரியவில்லை”.
“இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது எப்படி?”
“வினாத் தாள்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு தேர்வு எழுதுவோருக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக, வருமான வரித்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். இதுபோன்ற பயிற்சி வகுப்புகளைத் தமிழக அரசு, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நடத்தினால் தமிழகத்திலிருந்து அதிகப்படியானோர் மத்திய அரசுப் பணிகளுக்குச் செல்ல வாய்ப்பாக அமையும்”.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக