ஞாயிறு, 24 மார்ச், 2019

இவர்தான் அமுதன்… இதுதான் திமுக!

இவர்தான் அமுதன்… இதுதான் திமுக!ஆரா மின்னம்பலம் : திமுக என்றாலே மொழிப்போர், மிசா, சிறை, இந்தி எதிர்ப்பு என்பவை ஆங்கிலத்தில் ’சினானிம்ஸ்’ போல உடன் நினைவுக்கு வரக் கூடிய சொற்கள். ஆனால் இன்றோ திமுக என்பதன் அர்த்தங்கள் மாறிப் போய் அந்த சொற்கள் எதார்த்தத்தில் மறைந்தும் போய்விட்டன.
அதற்கான சாட்சியமாய் மரணித்திருக்கிறார் அமுதன். விருதுநகர் மாவட்ட திமுக மூத்த முன்னோடி. கலைஞருக்கு அறுபது ஆண்டு கால நண்பர், பேராசிரியர் அன்பழகனுக்கு அறுபது ஆண்டு கால நண்பர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் நெடுநாள் நண்பர், திமுக இலக்கிய அணியின் மாநில துணைத் தலைவர் என திராவிடத்தில் ஊறித் திளைத்தவர்.
கடந்த மார்ச் 17 ஆம் தேதி நள்ளிரவு மாரடைப்பால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் காலமானார்
அமுதன். ஆனால் இன்றுவரை, திமுகவிடம் இருந்து அதிகாரபூர்வமான ஓர் இரங்கல் செய்தியில்லை, முரசொலியில் சில வரிகள் வரவில்லை, திமுகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அமுதன் உடலை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
விருதுநகர் செந்தில்குமார் கல்லூரியில் பேராசிரியர் அன்பழகனின் தம்பி க. திருமாறனின் மாணவராகப் பயின்றவர் ச.அமுதன். சிறந்த தமிழ் வீரர், திராவிடச் சிந்தனையாளர். கல்லூரியில் மாணவர் பேரவை தலைவராக இருக்கும்போது 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கலைஞர் கருணாநிதியை கல்லூரி மாணவர் பேரவைக்கு அழைத்து கூட்டம் நடத்தியவர் அமுதன். அன்று குறளோவியம் என்ற தலைப்பில் கல்லூரியில் உரையாற்றினார் கலைஞர்.
அப்போது முதற்கொண்டு கலைஞருக்கு நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தவர், அண்ணாவுக்கு சிறந்த தம்பியாகவும், பேராசிரியர் அன்பழகனுக்கு சிறந்த நண்பராகவும் திகழ்ந்தவர் ச. அமுதன்.
திராவிட இயக்கத்தின் சிறந்த தளகர்த்தரான ச.அமுதன் தன் வாழ்வில் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் கழித்திருக்கிறார்.
1960 இல் ஆகாசவானி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை, விருதுநகர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்புக்குச் சிறை, 1962 இல் நடைபெற்ற விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்தில் மதுரை, திருச்சி சிறையில் 5 மாதம் சிறை, 1963 சட்ட எரிப்பு மறியலின்போது அமுதன் திருவில்லிபுத்தூரில் இருந்தார். சென்னையில் இருந்து அண்ணா… ‘தம்பி அமுதன் ஸ்டார்ட் இமிடியட்லி, யுவர் பிரசன்ஸ் ஈஸ் எசன்ஷியல் டுமாரோ’ என்று தந்தி கொடுத்து அழைத்ததை அடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டு அப்போதும் சிறை சென்றவர்.

1975 இல் அவசர நிலையில் மிசா சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் ஓராண்டு சிறை, எம்.ஜிஆர் முதல்வராக இருந்தபோது பல போராட்டங்களில் சிறை, 1985 இந்தித் திணிப்பு சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் சிறை என திமுகவுக்காக பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற ச.அமுதன் மறைவுக்கு திமுக தலைமையோ, திமுக மாவட்ட நிர்வாகமோ ஒரு பூ எடுத்துக் கூடவில்லை என்பது நெஞ்சைச் சுடும் நிஜம்.
நம்மிடம் பேசிய அமுதனின் மூத்த மகனும் தமிழக சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவருமான ரவி வர்மா,
“என் தந்தையை எம்.ஜி.ஆர். அழைத்தும் கூட அதிமுகவுக்கு செல்லவில்லை. கடைசி வரை கறுப்பு சிகப்பு வேட்டிதான் கட்டினார்,. ஆயிரம் குறை சொன்னாலும் என் தலைவர் கலைஞர்தான் என்றே இருந்து மறைந்திருக்கிறார்.
ஆனால் அவரது தகுதிக்கான மதிப்பு திமுகவில் கிடைக்காத காரணத்தால் நான் 2016 ஆம் ஆண்டே அதிமுகவுக்கு சென்றுவிட்டேன். நான் அதிமுகவில் சேர்ந்தேன் என்பதற்காக சொல்லவில்லை. கடைசி இரண்டு வருடங்களாக என் தந்தையாருக்கு ஏற்பட்ட பெரும் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. திமுகவாக இருந்தாலும் தன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் மூத்தவர் என்பதால் அதைச் செய்தார் அமைச்சர்.

என் தந்தை காலமானதை ஒட்டி அழகிரி வந்து அழுதார். திராவிடர் கழகத் தலைவர் இரங்கல் தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டுக்கு வந்தார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீடு தேடி வந்து ஆறுதல் சொன்னார். எங்கள் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபா வந்து அஞ்சலி செலுத்தினார். பலகட்சி நிர்வாகிகளும் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் திமுக சார்பில் ஒருவரும் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் மாவட்டச் செயலாளரே யாரும் அமுதனுக்கு இரங்கல் செலுத்த போக வேண்டாம் என்று உத்தரவிட்டாராம். திராவிட இயக்கத்துக்காக திமுகவுக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்த ஒரு தியாகிக்கு திமுக கொடுக்கும் மரியாதையை நினைத்தால் நெஞ்சு குமைகிறது.
என் தந்தையான ஓர் அமுதன் மட்டுமல்ல… இன்னும் ஆயிரமாயிரம் அமுதன்கள் திமுகவில் இப்படித்தான் வாழ்வார்கள். இப்படித்தான் மறைவார்கள்” என்று கண்கள் கசிந்தார்.
17 ஆம் தேதி இரவு அமுதன் இறந்த தகவல் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி உடனடியாக திருவில்லிப்புத்தூரில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று அழுதார். கடந்த சில ஆண்டுகளாகவே அழகிரியோடு அவர் நட்பு பாராட்டி வந்தது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே இத்தனை தியாக வரலாறு கொண்ட ஒரு திராவிட இயக்கத் தீரனை திமுக மூடி மறைக்கிறது.

அமுதன் இருந்தபோதே அவருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது, ‘நீங்க அழகிரி ஆளா?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘நான் அண்ணாவின் ஆள். என்னை அழகிரியின் ஆள் என்கிறீர்களே? கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் அது பகைமை ஆகிவிடக் கூடாது என்று காந்தி சொன்னார். அதைத்தான் நானும் பின்பற்றி வருகிறேன்’ என்று சிரித்தார். அப்படிப்பட்டவரை அழகிரி ஆள் என்று முத்திரை குத்திவைத்திருக்கிறது தலைமை. அவர் காலமான பின்னும் அந்த முத்திரை தொடர்வதுதான் கொடுமை.
அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தென் மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரிடமும், ‘அழகிரி ஆட்கள் யார் என்று லிஸ்ட் எடுங்கள். நீக்கிவிடலாம்’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதையடுத்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஒரு பட்டியலைப் போட்டு பேராசிரியரிடம் கொடுத்திருக்கிறார். அந்தப் பட்டியலில் முதலில் இருந்த பெயர் ச. அமுதன். அதைப் பார்த்த பேராசிரியர், ‘தலைவர்கிட்ட காட்டிட்டு எடுத்துட்டு வா’ என்று சொல்லிவிட்டார்.
அதையடுத்து மாவட்டச் செயலாளர் இந்தப் பட்டியலை கலைஞரிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். முதல் பெயர் ச.அமுதன் என்று இருந்ததைப் பார்த்தவுடனே கலைஞர் அந்த பேப்பரை கசக்கி தூக்கி எறிந்துவிட்டு, ‘அமுதன் யார்னு தெரியுமாய்யா?’ என்று கேட்டிருக்கிறார்.
தெரிகிறது…தன்னை மதிக்காத யாரையும் தேடிச் சென்று கும்பிடும் பழக்கம் கொஞ்சமும் இல்லாத சுயமரியாதைக் காரர் அமுதன். அண்ணா காலத்து திராவிட இயக்கத் தீரரை அழகிரி ஆள் என்று கருதி அஞ்சலி செலுத்தக் கூட செல்லாத தலைமை.
இவர்தான் அமுதன்… இதுதான் திமுக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக