சனி, 2 மார்ச், 2019

ஸ்டெர்லைட் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தும், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுரை கூறியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 1) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது, வேதாந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், 1996 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளன. ஆலையை மூட வேண்டும் என்கிற பல நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் சந்தித்துள்ளது. அதேபோல, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன்தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் அனல் மின் நிலையம் 7 சதவிகித சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலை 1 சதவிகிதம் மட்டுமே வெளியேற்றுவதாகவும் வாதிட்டார். நாட்டின் தாமிர தேவையில் 38 சதவிகிதம் பூர்த்தி செய்யும் இந்த ஆலையில் 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். 2 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக செலுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார். அதனால், ஆலையை பராமரிக்க தங்கள் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
9 மாதங்களாக ஆலை மூடப்பட்டதிலிருந்து இப்போது வரையில் வேதாந்தா நிறுவனத்துக்கு 13.8 பில்லியன் ரூபாய் (195 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் (7,06,000 டாலர்) இழப்பை நிறுவனம் சந்தித்து வருகிறது எனவும் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதால் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் தலைவர் அனில் அகர்வால் கூறியிருந்த நிலையில் தற்போது 9 மாதங்களிலேயே 195 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஸ்டெர்லைட் ஆலை தொடங்க வேதாந்தா நிறுவனம் முதலீடு செய்த 3000 கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் லாபம் ஈட்டி விட்டதாக தெரிவித்தார். ஆலையால் 28 ஆயிரம் அடி பரப்பிற்கு நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் ஆலை மூடப்பட்டது. பராமரிப்பு பணியின் போது அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு அரசே பொறுப்பேற்கும் என உறுதி அளித்தார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்யாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை வேதாந்தா நிறுவனம் பராமரிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
மீண்டும் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இந்த மனு குறித்து தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மார்ச் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக