திங்கள், 18 மார்ச், 2019

காங்கிரஸ் .. பல கட்சிகள் மாறி வந்த திருநாவுக்கரசருக்கு உள்ள மரியாதை ஏன் ஏனையோர்க்கு ?

சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவார் என்று தற்போதைய தகவல்கல் கூறுகின்றன.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்து விட்டன. காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் தங்களது வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிக்காமல் தாமதித்து வருகிறது. தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகம் உள்ள கட்சியான காங்கிரசில் தற்போது அறிவிக்கப்பட்ட செயல்தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என அனைத்து தரப்புமே தமிழகத்தில் உள்ள 9 சீட்டுகளுக்கு போராடி வருகிறார்கள்.
பீட்டர் அல்போன்ஸ் நெல்லை தொகுதியை கேட்டு வந்த நிலையில் அந்த தொகுதி திமுகவுக்கு சென்று விட்டது. அதனால் அவர் அப்செட்டில் இருக்கிறார். திண்டுக்கல் தொகுதிக்கு குஷ்பு அச்சாரம் போட்டு வந்தார் திண்டுக்கல்லும் திமுகவுக்கு சென்றுவிட்டது. இந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் பகீரத முயற்சி மேற்கொண்டு வந்தார் அதுவும் பலிக்கவில்லை.


 ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தமட்டில் ஈரோட்டில் எப்படியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சில பல மாதங்களாகவே அங்கு பணியாற்றி வந்தார் ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடு மதிமுகவுக்கு சென்று விட்டது. அதன் பின்னர் கோவையை கேட்டார் கோவையும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு சென்று விட மனிதர் நொந்து போய் திண்டுக்கல்லையாவது தாருங்கள் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இப்போது திண்டுக்கல்லும் கை நழுவி போய் விட்டது. இப்படியாக காங்கிரசில் இருக்கின்ற 9 தொகுதிகளுக்கு 900 பேர் சீட் கேட்டு வருகின்றனர்.

சிவகங்கை தொகுதியை பொறுத்த மட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பலமுறை போட்டியிட்டு வென்ற தொகுதி. இப்போது அவர் மாநிலங்களைவை உறுப்பினராக உள்ளார். இதனால் சிதம்பரத்தின் மகன் அல்லது மருமகள் போட்டியிடுவார்கள் என்று தகவல் பரவியது. இதற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவரும் இந்த தொகுதியை கேட்டு போராடி வந்தார். இந்நிலையில் 2009 –ம் ஆண்டு விருதுநகர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட மாணிக்கம் தாகூருக்கு இந்த தொகுதி வழங்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. மாணிக்கம் தாகூருக்கு சிவகங்கை சொந்த தொகுதி என்பதால் மாணிக்கம் தாகூருக்கு இந்த தொகுதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 மாணிக்கம் தாகூர் சிவகங்கைக்கு மாறினால் தனக்கு விருதுநகரை தரவேண்டும் என்று ஈவிகேஎஸ் கேட்டு வருகிறாராம். விருதுநகரை ஈவிகேஎஸ் சுக்கு வழங்கலாம் என்று காங்கிரஸ் தலைமையும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் திருநாவுக்கரசருக்கு திருச்சி தொகுதி வழங்க ராகுல் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை கேள்விப் பட்ட ஈவிகேஎஸ் பல கட்சிக்கு சென்று வந்தவர்களுக்கு காங்கிரசில் சீட் வழங்கப்படுகிறது. ஆனால் காங்கிரசையே நம்பி இருப்பவர்களுக்கு சீட் இல்லையா என்று விமர்சனம் செய்திருந்தார்.

 இந்த நிலையில் விருதுநகர் ஈவிகேஎஸ் –சுக்கும் சிவகங்கை மாணிக்கம் தாகூருக்கும் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக காங்கிரசார் கூறுகின்றனர். கோஷ்டியே உனது மறு பெயர் என்ன என்ன என்று கோஷ்டியிடம் கேட்டால் அது காங்கிரஸ் என்றே கூறும் என்பதால் கோஷ்டிகளின் வற்புறுத்தல்களால் இது கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக