செவ்வாய், 12 மார்ச், 2019

கவிஞர் சல்மா : வேலூரில் தமிழ் மொழியை கற்க மாட்டேன் உருது மட்டுமே கற்பேன் என்பது தவறு.

gukkuu.com :பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமொழியாகக் கூட எழுத முடியாது ஆம்பூரில்  இஸ்லாமியர்கள் போராட்டம்  நடத்தியது அறியாமை என்றும் அவர்களுக்கு தலைவர்கள் தகுந்த விளக்கம் அளித்து புரிய வைக்க வேண்டும் என்றும் தி.மு.க. பிரமுகரான கவிஞர் சல்மா நம்மிடம் தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2006ம் வருடம் தமிழக அரசு சட்டம்  ஒன்றை  அமல் படுத்தியது. சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இத்திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை  எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்,  பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்தும்  விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


போராட்டம்…

இந்த நிலையில் வரும் 14ம் தேதி 10ம் வகுப்புத் தேர்வுகள் துவங்க இருக்கிறது.
இச்சூழலில்  வேலூர் மாவட்டம், ஆம்பூரில் செயல்படும் இஸ்லாமிய உருது கல்விக்கூடமான, மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 9ம் தேதி போராட்டம் நடத்தினர்.
பள்ளி  வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், தங்களுடைய தாய்மொழியான உருது மொழியில் மட்டுமே அனைத்து பாடங்களுக்குள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோம் என்றும், தமிழ் மொழித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தினர்.
தகவல்  அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சம்பவ இடத்திக்கு வந்து “உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையைத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க முயல்கிறேன்” என்றார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக்  கலைந்து சென்றனர்.
இந்தப்  போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் பதட்டம் நிலவியது.
இந்த  நிலையில், தி.மு.க மகளிர் அணி துணை செயலாளர், சல்மாவிடம் பேசினோம். இவர், தமிழில் முக்கியமான இலக்கிய ஆளுமை.
இவரது,  பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னொரு மாலையும் ஆகிய கவிதைத் தொகுப்புகளும்,   இரண்டாம் ஜாமங்களின்கதை,   மனாம் ஏந்தல் ஆகிய நாவல்களும் தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.


கவிஞர் சல்மா

அவர்  நம்மிடம்  தெரிவித்ததாவது:
“ஆம்பூர்  இஸ்லாமிய உருது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும், தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட வைக்கக்கூடாது..  அதில்  தேர்வு கூடாது என்று போராட்டம் நடத்தியது மிகவும் வருந்தத்தக்கது.
அவர்களுக்கு  உருது தாய் மொழி. அதைப் படிக்க அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் இருக்கிறது.
அதே நேரம்  இங்குள்ள பூர்வீக மொழியை, பெரும்பாலோர் பேசும் மொழியை… இங்கு வாழும் மக்களின் மொழியை கற்க மாட்டேன் என்பதும் அந்த மொழிக்கு எதிராக பேசுவதும் தவறு.
இதனால்  அவர்களுக்கு எந்தவித பயனும் இல்லை. தவிர பொதுச் சமூகத்திடம் இருந்து அவர்கள் தனித்துச் செல்லவே உதவும். இது எவருக்கும் நல்லதல்ல.
தாம் வாழும்  இடத்தின் மொழியைத் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அறியாமல் போராடுகிறார்கள். இது அறியாமை.
இரண்டாவது  மொழியாகவாவது தமிழை எடுத்துப் படிக்க வேண்டும். வேண்டும்.
இதைத் தலைவர்கள் அவர்களுக்கு  எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.
அமெரிக்காவுக்குச்  சென்று வாழ்பவர்கள், ஆங்கிலம் படிக்கத்தானே செய்கிறார்கள்.
இன்னொரு விசயம் … இரண்டு மொழி தெரிந்தால் இரண்டு மனிதருக்கு சமம் என்பார்கள். அப்படிக் கூடுதலாக ஒரு மொழியைப் படிப்பது நல்லதுதானே” என்றார் கவிஞர் சல்மா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக