செவ்வாய், 12 மார்ச், 2019

நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்! பேட்டி கூடாது..

பேட்டி கூடாது: நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு ஜாமீன்!மின்னம்பலம் : கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் 330 நாட்கள் சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முருகன், கருப்பசாமி ஆகியோருக்குக் கடந்த மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் கோரி நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இரண்டாவது கட்ட விசாரணையில் நிர்மலா தேவி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், சிறையில் நிர்மலா தேவிக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகவும், அவர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 12) இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. அப்போது, நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. நிர்மலா தேவி ஊடகங்களுக்கோ, தனிநபருக்கோ பேட்டி அளிக்கக் கூடாது என்றும், விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது உயர் நீதிமன்றக் கிளை.
நாளை சிறையிலிருந்து வெளியே வருகிறார் நிர்மலா தேவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக