சனி, 16 மார்ச், 2019

இளங்கோவன், குஷ்பு போட்டியிட மனு.. கன்னியாகுமரி-திருவள்ளூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி

மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி-திருவள்ளூர்
தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இளங்கோவன், நடிகை குஷ்பு போட்டியிட மனு கொடுத்துள்ளனர். சென்னை:
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் மனு கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.
இதே போல் திருவள்ளூர் தொகுதிக்கும் கடும் போட்டி உள்ளது. இதுமட்டும்தான் தனி தொகுதி என்பதால் இதற்கும் கடும் போட்டி இருக்கிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு கொடுத்துள்ளனர்.


முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வில்லை.
இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 பேர் மற்றும் அகில இந்திய காங் கமிட்டி உறுப்பினர் ரகு உள்பட பலர் மனு கொடுத்தனர்.
தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதற்காக சென்னையை சேர்ந்த சிவராமன், ரங்க பாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மனு கொடுத்தனர். இதுபோல் விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடவும் மனு கொடுத்துள்ளனர்.
ஆரணி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, திருச்சிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் மனு கொடுத்தனர்.
திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் அவருடைய மகன் ராமசந்திரன், மனு கொடுத்தார். இதே தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு பெயரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்தார். இன்று மாலைவரை மனுக்கள் பெறப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக