வியாழன், 28 மார்ச், 2019

திமுக ஐ.டி விங்.. மிக தாமதமாக ஆரம்பித்திருக்கிறது ... இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஐ டியை அறிமுகப்படுத்திய திமுக

நந்தினி வெள்ளைச்சாமி - tamil.thehindu.com : இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனிக்கொள்கை வகுத்தது, அரசு துறைகளை கணினிமயமாக்குதல், மென்பொருள் பொறியியல் துறையில் வளர்ச்சி என, தகவல் தொழில்நுட்ப துறையில் பல சாதனைகளை புரிந்தது திமுக. கட்சி ரீதியாகவும், தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்களின் பலத்தை அறிவதற்கு முன்பே, திமுக அதன் நுணுக்கங்களை அறிந்துகொண்டது எனலாம்.
தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அரசின் வழியாக, ஆட்சிப்பணியில் முன்னோடியாக இருந்த திமுக, கட்சியை தகவல் தொழில்நுட்ப ரீதியாக வளர்த்தெடுப்பதில் இடைப்பட்ட காலத்தில் கோட்டைவிட்டது.

திமுக தன் சித்தாந்த எதிரியாக கருதும் பாஜக தகவல் தொழில்நுட்பத்தைக் கட்சிக்கு சார்பாக பயன்படுத்துவதில் இந்தியாவில் வேறு எந்தக்கட்சியும் எட்டமுடியாத நிலைக்குச் சென்றிருந்த நேரத்தில், மிகத்தாமதமாக 2017 ஆம் ஆண்டில் தான் தகவல் தொழில்நுட்ப அணியை ஆரம்பித்தது.
திமுகவிற்கே உரிய பாணியில் பரந்துபட்ட அறிவிப்புகள், நேர்காணல்கள் மூலம் அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மீது இணையத்திலும், பொதுவெளியிலும் அதிருப்தி இருக்கிறது. அதிருப்தியாளர்கள் யாரும் வெளிநபர்கள் இல்லை. திமுகவுக்காக இணையத்தில் களமாடுபவர்கள், சொந்தக்கட்சிக்காரர்கள்!
ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனநிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு இது முதல் தேர்தல். எதிர்ப்புறத்தில் அசுரபலத்துடன் பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மிரட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த தேர்தலில் திமுகவின் திட்டம் என்ன? என்ன யுத்தி வைத்திருக்கிறது? தன் பலத்தை நிரூபிக்குமா? பலவீனம் குறித்த குற்றச்சாட்டுக்களை இல்லை என்றாக்குமா? என ஏராளமான கேள்விகள் இருக்கிறது.
கேள்விகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் முன்வைத்தோம். தியாகராஜன் தமிழ்நாட்டின் பிரபலமான அரசியல் குடும்பப்பாரம்பரியம் கொண்டவர். சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.டி.பழனிவேல்ராஜனின் மகன். திமுகவுக்குள் ஆன்மீகப்பணிகளும், விருப்பங்களும், அடையாளமும் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர். பழனிவேல்ராஜன் மறைவுக்குப் பிறகு வெளிநாட்டில் கல்வி, வேலை என்று இருந்த தியாகராஜன் அரசியலில் நுழைந்தார். போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே வெற்றிபெற்ற தியாகராஜன் பிரம்மாண்டத் திட்டமிடலோடு தகவல் தொழில்நுட்ப அணியைக் கட்டமைக்க நினைக்கிறார். அவரது திட்டங்கள் சாத்தியமாகியிருக்கிறதா? என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்
 நம் கேள்விகளுக்கு பதிலளித்த தியாகராஜன், "டேட்டா கலெக்‌ஷன், டேட்டா அனாலிசிஸ், சமூக வலைதளங்கள் என எல்லா வகைகளிலும் தேர்தலுக்காக பணியாற்றி வருகிறோம். தொழில்நுட்ப அணி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை அடைந்து விடுவோம். அதுமட்டுமின்றி பலமான அடிப்படை உட்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.
கடந்த 2014 தேர்தலில், மோடி பிரதமரானதன் பின்னணியில், சமூக வலைதளம் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை பல கட்சிகள் இப்போது புரிந்து வைத்திருக்கின்றன. அதற்கு உதாரணம் தான், 2016 சட்டப்பேரவை தேர்தலில், மு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக வைரலாக்கியது. அந்த தேர்தலில் திமுக அதிகளவிலான இடங்களை கைப்பற்ற இத்தகைய யுக்தியும் ஒரு காரணம் என பேசப்பட்டது.
சமூக வலைதளம் மற்றும் தொழில்நுட்பத்தில் பாஜகவின் பலத்தை திமுக புரிந்து வைத்திருக்கின்றது. என்றாலும், பாஜக போலி செய்திகளையே அதிகம் பரப்புவதாக குற்றம்சாட்டுகிறார் பழனிவேல் தியாகராஜன்.
"பாஜக பரப்பும் போலி செய்திகளை கண்டறிந்து ஆதாரத்துடன் உடனடியாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி பதிலடி கொடுக்கிறது" என்கிறார்.
'நமோ வாரியர்ஸ்' என்ற பெயரில் பாஜக தமிழகம் முழுவதும் சுமார் 25,000  தன்னார்வலர்களையும், அதிமுக சமூக வலைதளத்தில் பிரச்சாரம் முன்னெடுக்க தனியார் நிறுவன துணையையும் நாடியிருக்கிறது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களில் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான சில முழக்கங்களை முன்னெடுப்பதில் திமுக பங்காற்றியுள்ளது. கடந்த 2018, ஏப்ரல் மாதம் காவிரி பிரச்சினை சூடுபிடித்திருந்த போது, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு உடையணிந்து போராட்டம், கருப்பு பலூன்களை பறக்கவிடுதல் என திமுக நடத்திய போராட்டம், 'GO BACK MODI' என இப்போது வரைக்கும் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் முழக்கம் உருவாக காரணமாக அமைந்தது. அதேபோன்று, கருணாநிதி சிலை திறப்பு விழாவில், 'சாடிஸ்ட் மோடி' என ஸ்டாலின் முழங்கியதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
ட்விட்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உட்பட முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி, எம்எல்ஏக்கள், தகவல் தொழில்நுட்ப அணியின் பக்கங்கள், சேலம், திருச்சி, நெல்லை என முக்கிய மாவட்டங்களின் பக்கங்கள் என அனைத்துக்கும் வெரிஃபிகேஷன் பெற்றுள்ளனர். இதன்மூலம், அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் இயங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்துவைத்துள்ளது தெரிகிறது.
இருப்பினும், ஸ்டாலின், கனிமொழி போன்றோர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் போக்கை உணராமல் பழமைத்தனத்துடனேயே அணுகுவதாக ஒரு விமர்சனம் உள்ளது. அதாவது, ஒரு பதிவை ட்விட்டரில் இடும் போது அதனுடன் கூடிய கருத்துடைய மற்ற தலைவர்களையோ, மற்ற மாநில தலைவர்களையோ டேக் செய்தல், ஒத்த கருத்துடைய தலைவர்களின் பதிவுகளை ரீட்வீட் செய்தல் போன்று ஒரு விவாதத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுக்க இந்த தலைவர்கள் தவற விடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாட்டை சமூகவலைதளவாசிகள் அறிந்துகொள்வது எளிதாகும்.

ஸ்டாலின் - கனிமொழி: கோப்புப்படம்
 இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த நிர்வாகி, "ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எப்படி அரசியலில் பயிற்சி எடுத்தார்களோ அதே ரீதியிலேயே சமூக வலைதளங்களிலும் இயங்குகின்றனர். ஆனால், இதன் காரணமாக அவர்கள் சமூக வலைதளத்தின் நுணுக்கத்தை புரிந்திருக்கவில்லை என கூற முடியாது. அதனை நன்றாக புரிந்து வைத்துள்ளதால் தான், தகவல் தொழில்நுட்ப அணியை தலைவர் ஸ்டாலின் பலமாக கட்டமைக்கிறார்" என்றார்.
திமுகவின் பலமே அதன் கட்டமைப்பும், உறுதியான அமைப்பும் தான். தகவல் தொழில்நுட்ப அணியும் கட்டமைப்பை பலப்படுத்த உழைப்பதாகத் தெரிகிறது.
"மாநில செயலாளர் முதல் பூத் கமிட்டி நிர்வாகிகள் வரை, தமிழகம் முழுவதும் சுமார் 85,000 நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்த பலமான உட்கட்டமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இல்லை" என்கிறார் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மையக்குழுவில் (Core Team) 40 பேர் முழுநேரம் பணிபுரிபவர்களாக உள்ளனர். இணைய உலகின் பெரும் கலைக்களஞ்சியமாக விளங்கும் 'விக்கிபீடியா' தளத்தின் ஆசிய பிராந்திய தலைவரும் அந்த முதன்மைக் குழுவில் உள்ளார், என்கிறார் தகவல் தொழில்நுட்ப மற்றொரு நிர்வாகி.
சமூக வலைதளங்களில், திமுகவின் ஆதரவாளர்கள், திராவிட கொள்கையில் நாட்டம் கொண்டவர்களும் தகவல் தொழில்நுட்ப அணியில் இல்லாவிட்டாலும் அவர்களும் திமுகவுக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றுகின்றனர். திராவிட கொள்கைகள், திமுகவின் திட்டங்களை பட்டியலிடுதல், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தல் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
ஆனால், அவ்வாறு சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் திமுகவிடமிருந்து சொற்ப பணத்தைப் பெற்றுக்கொண்டு இயங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருந்தார்.
திமுகவுக்கு தன்னியல்பாக சமூக வலைதளங்களில் செயல்படும் ஆதரவாளர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களிலேயே இயங்குவதாகவும் விமர்சனம் உள்ளது. களத்தில் அவர்களின் பங்களிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு முன், திமுகவின் சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் தரவுகள் மற்றும் தகவல்களுடன் ஆதாரங்களை முன்வைப்பதில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் சுணக்கம் உள்ளது என அந்த அணியின் நிர்வாகி ஒருவரே நொந்துகொள்கிறார்.
"மற்றவர்கள் பொய் பிரச்சாரம் முன்வைப்பதற்கு முன்பு நாம் என்னென்ன சாதனைகள் செய்தோம் என்பதை சொல்லிவிட வேண்டும். அப்படி செய்துவிட்டால், அவர்களின் பொய் பிரச்சாரத்தை வெளிக்கொண்டு வருவதிலேயே சமூக வலைதளங்களில் நேரம் செலவழிக்க வேண்டியதில்லை" என்றார்.
கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருவதாக, புகார் அளித்த சம்பவங்கள் உண்டு.
போட்டோஷாப்களுக்கும், அவதூறுகளுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் உள்ளார்ந்த விருப்பங்களும், செயல்திட்டங்களும் எப்படி எடுபடபோகின்றன என்பதற்கான அக்னிபரீட்சை இந்தத் தேர்தல் !
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக