வியாழன், 21 மார்ச், 2019

வசூலில் வேகம் காட்டும் வங்கி அதிகாரிகள் - தேர்தல் அறிக்கையில் கடன் ரத்து அறிவிப்பு எதிரொலி ..: வீடு தேடி வருவதால் விவசாயிகள், மாணவர்கள் அதிர்ச்சி

tamilthehindu : அதிமுகவும், திமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி அலுவலர்கள் தேர்தலுக்குள் முடிந்தவரை கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலோடு, 18 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறுவதால் வாக்குகளை எளிதில் பெறுவதற்காக மக்கள் எண்ண ஓட்டத்தை அறிந்து அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் பல சலுகைகளை அறிவித்துள்ளனர்.
குறிப்பாக அதிமுகவும், திமுகவும் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப் படும் என அறிவித்துள்ளன. ஆளும் கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், அனைத்து வகையான வங்கிகளில் மாணவ, மாணவியர் பெற்றுள்ள கல்விக்கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும், விவசாயிகளின் கடன் சுமையை நீக்கும் வகையில் உறுதியான திட்டம் செயல்படுத்த வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


அதேபோல், திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும், கல்விக்கடன்கள் முழுவதும் ரத்து செய்யப்படும், விவசாயிகளின் பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பிரதான கட்சிகளும் கடன் ரத்து குறித்து தெரிவித்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் தேர்தலுக்குள் முடிந்தவரை கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் நேற்று முதல் இறங்கியுள்ளனர். தேர்தல் நடைபெறும் ஏப்.18-ம் தேதிக்குள் வசூலித்தால் கிடைத்தது வரை லாபம் என நினைத்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயி ஒருவர் கூறியதாவது: வங்கியில் பெற்ற கல்விக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகிறோம். இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதுவரை வங்கி அலுவலர்கள் மொபைல்போனில் மட்டுமே தொடர்பு கொண்டு கடன்களை கட்ட வலியுறுத்தி வந்தனர். தேர்தல் அறிக்கை வெளியான நிலையில், இப்போது வீடு தேடி வரத் தொடங்கியுள்ளனர் என்றார்.
இதுதொடர்பாக அரசுடைமை வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், கல்விக்க டன்கள், பயிர்க்கடன்கள் பெற்றவர்களில் பலர் தவணை முறையில் பணம் செலுத்தி வருகின்றனர். இதுவரை பணம் செலுத்தாதவர்களிடம்தான் பணம் வசூலித்து வருகிறோம். தேர்தல் அறிவிப்புக்கும் நாங்கள் பணம் வசூலிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கமான பணிகளைத்தான் செய்து வருகிறோம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக