ஞாயிறு, 10 மார்ச், 2019

தமுமுக- மமக: மோதல் முடிந்தது! தேர்தல் வருகிறது!

தமுமுக- மமக: மோதல் முடிந்தது! தேர்தல் வருகிறது!மின்னம்பலம் : காலை 11 மணி முதல் இரவு வரை நடந்த தமுமுக- மமக செயற்குழுக் கூட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும், தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் இடையே நிலவிவந்த கடுமையான கருத்து முரண்பாடுகள், மோதல்கள் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.
விழுப்புரத்தில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நேற்று (மார்ச் 9) காலை தொடங்கிய செயற்குழு இரவு வரை நடந்தது. செல்போன்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உணவு கூட அரங்கத்துக்கே வரவழைக்கப்பட்டது.
இந்த அவசர செயற்குழுவில் இரண்டு விஷயங்கள்தான் பிரதான இடம் பிடித்தன. ஜவாஹிருல்லா –ஹைதர் அலிக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள், அதன் தொடர்ச்சியாக ஹைதர் அலி ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, அதையடுத்து ஜவாஹிருல்லா மீது பொது வெளியில் ஹைதர் அலி வைத்த கடுமையான 18 பக்க கடிதப் புகார்கள் ஆகியவையே முதன்மையாக விவாதிக்கப்பட்டன.

இரண்டாவதாக தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது, திமுக சீட் வழங்காதபோதும் அதற்கு ஆதரவு அளிப்பதா என்ற விஷயம். இவை இரண்டும்தான் முக்கிய இடம் பிடித்தன.
ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் இடையிலான மோதல்தான் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. ஹைதர் அலி வெளியிட்ட 18 பக்க கடிதத்தில் ஜவாஹிருல்லா மீது கடுமையான புகார்களை வெளியிட்டிருந்தார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் ஹைதர் அலியும் கலந்துகொண்டார். அப்போது நேருக்கு நேர் இருவரும் இந்த புகார்கள் பற்றி விவாதித்தனர். தன் மீது தொடுக்கப்பட்ட புகார்களுக்கு ஜவாஹிருல்லா தக்க சாட்சிகளையும் அழைத்து அவர்கள் மூலம் மறுத்தார். மேலும் ஜவாஹிருல்லா ஆதரவு நிர்வாகிகள் மீதான புகார்களையும் அவர்கள் மறுத்தனர். இதுவே சில மணி நேரங்கள் நீண்டன.
சில மாவட்டத் தலைவர்கள் எழுந்து, ‘நீக்கப்பட்டவர்களை உள்ளே அனுமதித்து அவர்களிடமும் விளக்கம் கேட்கலாம்’ என்று கருத்துச் சொன்னார்கள். அப்போது ஜவாஹிருல்லா, ‘அவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு முழு விளக்கம் அளித்தவுடன், அவர்கள் மீதான நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
ஹைதர் அலி- ஜவாஹிருல்லா ஆகியோரிடையே விவாதம் நீடித்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், “நீங்கள் இருவரும் தொடர்ந்து கருத்து முரண்பாடுகளோடு இருக்கிறீர்கள். இப்படியே இருந்தால் கட்சிக்கும், இயக்கத்துக்கும் நல்லதல்ல. கட்சிக்காக உழைத்தவர்கள் வெளியே வெயிலில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இருவரும் தத்தமது பொறுப்புகளிலிருந்து விலகி இளைஞர்கள் கையில் இயக்கத்தையும் கட்சியையும் கொடுங்கள். நீங்கள் மூத்த தலைவர்களாக இருந்து வழிகாட்டுங்கள்’ என்று கூறினார்கள்.
செயற்குழுவுக்கு இடையிலேயே ஹைதர் அலியும், ஜவாஹிருல்லாவும் இதுபற்றி தனியே விவாதித்தார்கள்.
தொடர்ந்து பேசிய ஹைதர் அலி, “இயக்கத்தை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அல்ல நான். இறக்கும்போதும் தமுமுக காரனாகவே இறப்பேன்” என்று பேசினார்.
ஜவாஹிருல்லா பேசுகையில், “என் மீதான புகார்களுக்கு உரிய விளக்கத்தை ஆதாரங்களோடு அளித்துவிட்டேன்” என்றார்.
மேலும் இப்போதுள்ள மாநில நிர்வாகிகளின் பதவிக் காலம் இன்னும் இரு வருடங்கள் இருக்கும்போதும் கட்சிக்கும் இயக்கத்துக்கும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் யார் வென்றாலும் அவர்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் ரமலானுக்குப் பிறகு மமகவுக்கும், தமுமுகவுக்கும் அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செயற்குழு கூட்டத்தில், “வரும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கே நாம் ஆதரவளிக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பல தியாகங்களைச் செய்தவர்கள். இப்போதும் நாடு ஒரு சுதந்திரப் போரை எதிர்கொண்டிருக்கிறது. இதிலும் நாம் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் நாட்டு நலன் கருதி, சமுதாய நலன் கருதி நாம் பாஜகவைத் தோற்கடிக்கும் வலிமையுள்ள திமுக அணிக்கு நமது ஆதரவைத் தெரிவிக்கிறோம்” என்று பேசினார் ஜவாஹிருல்லா.
இந்தக் கூட்டத்தின் மூலம் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் இடையிலான முரண்பாடுகள் ஓரளவுக்கு பேசித் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு சகஜ நிலை இருவருக்கும் இடையே தோன்றிவிட்டது என்று சொல்ல முடியாது என்றாலும், இருவருக்கும் இடையே இருந்த பெரிய தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் தமுமுகவின் மூத்த நிர்வாகிகள். மேலும் உலமாக்கள் சபை சார்பாக, ‘கட்சியில் பிளவு வேண்டாம். அது நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல’ என்று தெரிவித்திருந்தனர். அது நடந்திருப்பதால், உலமாக்களும் இந்த செயற்குழுவு முடிவை வரவேற்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக