வியாழன், 14 மார்ச், 2019

ராகுல் என்று என்னை பெயரை சொல்லி அழையுங்கள்.

Karthikeyan Fastura : ஸ்டெல்லாமேரிஸ் ராகுல்காந்தியின் வீடியோவை
கேட்டேன். காங்கிரஸ் மீதான எனக்கு இருந்த கடந்தகால விமர்சனங்களை மீறி நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
3000 இளம் மாணவிகள் மத்தியில் நிச்சயம் இப்படி ஒரு Open Discussion வைப்பதற்கே ஒரு தில் வேண்டும்.அதிலும் மனிதர் தமிழ்நாட்டிற்கே பிடித்த கருப்பு நிறத்தில் T-shirt அணிந்துவந்தது சிறப்பு. அவரது PRO டீம் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது
வரவேற்புரை நிகழ்த்துபவர் Mr.காந்தி என்றே விளிக்கிறார். எந்த அடைமொழியும் இல்லை.
வரவேற்புரைக்கு பிறகு இவரை பேச அழைக்கிறார்கள். இவர் நேரடியாக விவாதத்திற்கு சென்றுவிடுகிறார். அதிலும் எனக்கு கடினமான கேள்விகளே கேளுங்கள் எளிதான கேள்விகள் வேண்டாம் என்று சொல்கிறார்
மாணவிகள் கேள்விகளை தொடுக்கும் முதல் கேள்வியிலேயே சார்..என்று விகுதி சேர்க்க தேவையில்லை. ராகுல் என்று பெயரை சொல்லி அழையுங்கள் என்கிறார். மீண்டும் ஒரு மாணவி சார் என்று சொல்லும்போது அதை மீண்டும் மறுக்கிறார். இது தான் இளமையின் அடையாளம்.
ஒவ்வொரு கேள்விக்கும் spontaneous ஆகவும், நேர்த்தியாகவும் பதில் சொல்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய தடைக்கல் எது என்று ஒரு மாணவி கேட்க " Crony Capitalism" என்று சட்டென்று பதில் வருகிறது.
பல இடங்களில் வட இந்தியாவை விட்டுக்கொடுத்தே பேசுகிறார். வட இந்தியாவில் இப்படி வளர்ச்சியை எங்கும் பார்க்க முடியாது. இதுபோன்ற இத்தனை பெரிய அறிவார்ந்த மாணவிகள் கூட்டத்தை பார்க்க முடியாது. அதேசமயம் தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேறத்திற்கு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது என்கிறார்.
எங்கள் அரசில் தமிழ்நாட்டின் பங்கு பெரிய அளவில் இருந்தது. இனிமேலும் இருக்கும் என்றார்.
இன்று இருக்கும் அரசு வடஇந்திய அரசாக மட்டுமே செயல்படுகிறது. நாங்கள் அனைத்து இந்திய பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை தான் விரும்புகிறோம் என்றார்.
அவரது ஒவ்வொரு பதிலிலும் மறுக்க முடியாத உண்மை இருந்தது. தமிழ்நாட்டின் பல்ஸை பிடித்துவிட்டார். அரசியலுக்கு அள்ளிவிடும் வாக்குறுதிகள் இல்லை. கடைசி கேள்வி ஏன் நீங்கள் மோடியை கட்டி அணைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அருமை.
கடந்த தேர்தலில் நான் அரசியல் களத்திற்கு இளையவன். இன்றும் இளையவன் தான் என்றபோதும் அன்று அவர்கள் யுத்தி, தாக்குதல்கள், வியுகங்கள் புரியவில்லை. நாங்கள் தோற்றோம். ஆனால் அந்த தோல்வியும் நல்லதே. அதில் தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உங்களுக்கு கற்றுக்கொடுத்தவரை நீங்கள் வெறுக்க முடியுமா.. நானும் அவரை வெறுக்கவில்லை. அவர் என் மீது, எங்கள் கட்சியின் மீது, என் குடும்பத்தினர் மீது தீராத வெறுப்பை கொண்டிருந்தார். அந்த வெறுப்பு அவரை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. அது யாருக்கும் நல்லதல்ல. ஆகவே அவரை கட்டி அணைத்தேன். அவர் காட்டிய கோபத்திற்கு பதில் அன்பை கொடுத்தேன். அன்பை விட சிறந்த ஒன்று ஏதாவது இருக்கிறதா.. நீங்களும் உங்களை வெறுப்பவரிடம் அன்பை கொடுங்கள்.
இதெல்லாம் மேடை பேச்சாகவே இருந்தாலும் ஒரு இளம் தலைவரிடம் இருந்துவரும் இப்படி ஒரு பேச்சு பார்ப்பவர் எவருக்கும் நம்பிக்கையே கொடுத்திருக்கும். எனக்கும் கொடுத்தது.
இதில் ஒன்றை கூட மோடியிடம் எதிர்பார்க்க முடியாது. மாறாக கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளையும் கிண்டல் செய்யும் கண்ணியமற்ற போக்கு தான் மோடியிடம் இருக்கிறது. மோடி செய்த ஒரே நல்ல காரியம் ராகுலை நல்ல அரசியல் தலைவராக உருவாக்கியது தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக